வெள்ளி, 19 மார்ச், 2010

விழிப்பு

You are person read this...

இருட்டுக்குள்ளே
இமைத்துக் கொண்டிருந்த
என் கண்களுக்கு
விழிப்பு வந்தது - மெதுவாக
விழித்துப் பார்க்கிறேன்.
மனிதன் நவ நாகரீகத்தில்
மோகம் கொண்டு - அதன்
போர்வைக்குள் அகப்பட்டு
உணர்வூட்டுவாரின்றித்
தினம் தினம் சீரழிகின்றான்!

சந்தியிலே நிற்கின்ற
இளைஞர்களினால்
வேலைச்சுமை தாங்க முடியாது
வெந்து கொள்ளும் அம்மாமார்...
தினமும் நெற்றி வியர்வை
சிந்தச் சிந்த
குடும்பத்துக்காய் உழைத்து
ஓடாய் இளைத்து
வீட்டுச் செலவுக்கே
காசில்லாது சினம் கொள்ளும்
அப்பாமார்...

பக்கத்து வீட்டுக் குடிகார
அப்பனின் குடியால்
அவன் குடும்பம் அன்றாடம்
அவதியுற்று நடுத்தெருவில்
நிற்கும் நிலை
அச்சச்சோ! அவன் வாயால்
சகிக்க முடியாத
உச்சரிப்புக்கள்.

சீதனக் கொடுமையால்
ஆசைகளை வீட்டிலே
பூட்டி வைத்து
அழகு பார்க்கும் பெற்றவர்கள்.
பெற்றெம்மையெல்லாம்
பேணி வளர்த்தாளாக்கிய
அம்மா, அப்பா
யாருமற்ற அனாதைகளாய்த்
தஞ்சம் புகும் முதியோர் இல்லம்.

ஐயோ இதென்ன கொடுமை!
என்னால் இவற்றைப்
பார்க்கவே முடியவில்லை
மீண்டும் கண்களை நான்
இறுக மூடிக் கொள்கிறேன்.

8 கருத்துகள்:

Jawahar சொன்னது…

உங்கள் கவிதையில் நல்ல சமூகப் பார்வை இருக்கிறது. மனித நேயம் இருக்கிறது. சொல்கிற விதத்தைக் கொஞ்சம் சீர் கூட்டினால் சிறப்பான கவிதைகளை உங்களால் எழுத முடியும். உதாரணத்துக்கு பக்கத்து வீட்டு குடிகார அப்பா பற்றி எழுதியிருக்கும் கருத்து சிறப்பாக இருக்கிறது. அதை இன்னும் சற்று சிறப்பாகக் கூறலாம் :

அடுத்த வீட்டுத் தகப்பன்
குடித்து விட்டுத் தெருவில்-தினம்
கெட்ட வார்த்தைப் பேச்சு-அவன்
குடும்பம் தெருவுக்குப் போச்சு

என்று எழுதும் போது கருத்தும் வருகிறது, கவிதையும் சிறக்கிறது. சரிதானே?

http://kgjawarlal.wordpress.com

ரவிசாந் சொன்னது…

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா. நான் கடந்த சில வருடங்களாக தான் எழுதத் தொடங்கியிருக்கிறேன். இனி வரும் காலங்களில் எனது பதிவை இன்னும் அழகாக வாசகர்களாகிய உங்களுக்கு தருகிறேன்.

Ramesh சொன்னது…

கவிதைக்கரு அருமை கவிதையை மெருகூட்டலாமே..
தொடருங்கள் வாழ்த்துக்கள்

சத்ரியன் சொன்னது…

சகோதரா,

கவிதை சிறப்பாக இருக்கிறது.

சுண்டக்காய்ச்சுங்கள். இனிமை இன்னும் கூடும்.

வாழ்த்துகள்.

தொடருங்கள்.

ரவிசாந் சொன்னது…

உங்களின் ஆதரவுக்கு நன்றி. சத்ரியன், ரமேஸ் அண்ணாக்களே உங்களின் கருத்துக்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

இருட்டுக்குள்ளே
இமைத்துக் கொண்டிருந்த
என் கண்களுக்கு
விழிப்பு வந்தது - மெதுவாக
விழித்துப் பார்க்கிறேன்.
மனிதன் நவ நாகரீகத்தில்
மோகம் கொண்டு - அதன்
போர்வைக்குள் அகப்பட்டு
உணர்வூட்டுவாரின்றித்
தினம் தினம் சீரழிகின்றான்.

வரிகளுக்குள் ஊடுருவியிருக்கிறாய் ரவி.உன்னைப்போல் இளம் கன்றுகள் நவநாகரீகமோகம்கொண்டு சீரழியும் இக்காலத்தில் உனது இக்கவிதை மனதை மகிழச்செய்கிறது..

இன்னும் இன்னும் முன்னேறிவா. நற்செய்திகளை அள்ளித்தா..

வாழ்த்துக்கள்

ஆடுமாடு சொன்னது…

நல்லாருக்கு.


செம்மண்ங்கற உங்க பதிவு தலைப்பே பல உணர்வுகளைத் தருகிறது.

வாழ்த்துகள்.

ரவிசாந் சொன்னது…

நன்றி மல்லிகா, ஆடுமாடு. உங்களின் வரவை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.