புதன், 14 ஜூலை, 2010

யுத்தத்தின் குரல்


பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானது.
நீல வானம் கறுப்பானது.
எம் பச்சை வயலும் தரையும் சிவப்பானது.
எம் கண்ணீர்பட்டு தண்ணீர் கூட இரத்தமானது.
ஐயோ ஐயோ இது கனவல்ல.

போகும் வழியெல்லாம் இரத்த வாடையுடன் பிரேதங்கள்
இல்லை இல்லை இவர்கள் பிரேதங்களே இல்லை
என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என் அண்ணா, என் நண்பர்கள்.
மனிதர்களை மனிதர்களே அழித்துவிட்டார்கள் . . .

அருகில் இருந்து கட்டியணைக்க ஆசை
கண்ணீர் வற்றும் வரை கதறியழ ஆசை
என்னைச்சுற்றி பல துப்பாக்கி முனைகள்:
பயங்கர ஆண்களால், என் சகோதரியின் உடல்
பலாத்காரப்படுத்தப்பட்டு, பயத்துடன் விறைத்துக் கிடக்கிறது
இரத்தக் கறைகளுடன், கால் இழந்து கையிழந்து தரையில் துவண்டு
அலறும் என் சகோதரர்களின் குரல் அதிகரிக்கின்றது
இறந்த பெற்றாரை எழுப்ப தரையில் கதறும் எம் குழந்தைகளை,
மிதித்து செல்கின்றன, வழி தெரியாப் பாதங்கள் . . .
பயங்கர செல் துண்டுகளிடம் இருந்து – இரு உயிர்களை காப்பாற்ற,
ஓடிய கர்ப்பிணி தாயின் இரண்டு கால்களும், சிதைக்கப்பட்டு தரையில் துடிக்கின்றன
செல் துண்டுகள் என்னையும் சிதைக்க ஓடி வருகின்றன.
நானும் பிணமாகமாட்டேன்.
அந்த பயங்கரமான ஆண்களால் பலாத்காரப் படுத்தப்பட மாட்டேன்
என்னை சுற்றி ஆறாக ஓடும் என் பிள்ளைகளின் இரத்த கண்ணீரையும்,
சிதைந்து கிடக்கும் என் சகோதரனின் உடலையும் தொடர்ந்தும் பார்க்கமாட்டேன்
(எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.)

ஓடினேன் ஓடினேன் முடியவில்லை
உறங்க வீடும் இல்லை.
உயிர் வாழ உணவும் இல்லை.
இரத்த வாடை கொண்ட சிவப்பு ஆடையை மாற்ற துணியும் இல்லை.
காயங்களுக்கு மருந்தும் இல்லை
கட்டியணைக்க கரங்கள் இல்லை
அன்பான வார்த்தைகள் கூற யாரும் இல்லை
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.

பயங்கர கொடுமைக்காரர்கள் எமது கர்ப்பப்பையை சிதைத்தார்கள்
தோழர்களின் கோபங்களால்
எம் காயங்களின் மேல் துப்பாக்கியை நடக்க செய்தார்கள்.
சமாதானம், மனித உரிமை பேசும் எம் நண்பர்கள் கூட
மக்கள் குரல் கேட்காது போனார்கள்.
அயல் நாட்டு நண்பர்கள், இறந்து கிடக்கும்
எம் குழந்தைகளின் உடல் மேல் போர் ஒப்பந்தம் பேசிக் கொண்டார்கள்
பலம் வாய்ந்த தலைவர்கள் தம் பதவி வெறிக்கு
வறுமையில் வாழும் முகம் தெரியா
எம் காக்கி சட்டை சகோதரனை இரையாக்கி கொண்டார்கள்.
உலகநாட்டு பிரதிநிதிகள், பலம் வாய்ந்த ஆண்களை காப்பாற்றுவதிலும்,
பயங்கரவாத சட்டத்தை நிலை நாட்டுவதிலும் அக்கறை கொண்டார்கள்.

எம் நிலைகண்டு: அனைத்தும் கற்பனை என்றார்கள் – என் நண்பர்கள்
சுதந்திரத்தின் இறுதிக் கட்டம் என்றார்கள் – எம் நாட்டின் காவலர்கள்
எம் இரத்தம், எந்தப் பகுதியை சார்ந்தது என்ற பரிசோதனைக்கு தயாரானார்கள் – என் தோழர்கள்
பயங்கரவாதம் என்றார்கள்; – பிற நாட்டு நண்பர்கள்.
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின

பல வழிகளில் என் குரலை உயர்த்தி கூறினேன்:
இல்லை: இவை கனவுகளும் கற்பனைகளும் அல்ல
இல்லை: சுதந்திரமும் அல்ல:
இல்லை: பரிசோதனையும் அல்ல
இல்லை: பயங்கரவாதமும் அல்ல
இவை:
எம் இரத்தக் கண்ணீர்.
இரத்த ஆறுகள்
இரணத்துடன் கிழிந்துகிடக்கும் காயங்கள்.
வலியுடன் இணைந்த குமுறல்கள்
அமைதியை தேடும் விலையற்ற உயிர்கள்.

30 ஆண்டுகளாக – எம் உடல்
துப்பாக்கிகளாலும், செல் துண்டுகளாலும் துளைக்கப் பட்டு
சிதைக்கப்பட்டு வீதியில் கிடப்பது – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?
நின்மதி தேடி, சமாதானம் தேடி,
ஓடும் எம் பாதங்கள் – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?;
எம் குழந்தைகளின் பிரேதங்களை – உன் கண்கள் எப்படிக் காண மறுத்தது?
எம் கர்ப்பப்பையை- உன்னால் ஏப்படி சிதைக்க முடிந்தது?
துப்பாக்கியும் செல்த்துண்டுகளும் பயங்கரமான பாதங்களும்
எம் முகத்தை அழித்துவிட்டது.
எம் குரலை புதைத்து விட்டது

எமது குழந்தைகளின் பிணங்களின் மேல் – நடத்தும் போர்ப் பேச்சு வார்த்தையை நிறுத்து
பயங்கர துப்பாக்கி முனைகளுக்கும், கொடூர கொலைகளுக்கும் துணைபோவதை நிறுத்து
எம்மை, எம் குழந்தைகளின் எதிர்காலத்தை,
அழிக்கும் உன் அநியாய செயல்களை நிறுத்து
வன்முறையை நிறுத்து
இரத்தம் காண்பதை நிறுத்து
பசிக் கொடுமையை நிறுத்து
எம் காயங்களை பார்க்க மறுப்பதை நிறுத்து
யுத்தத்தை நிறுத்து
பயங்கரமான உன் பாதங்களாலும் துப்பாக்கிகளாலும்
எம் குரல் புதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போதிலும்

உங்கள் பாதங்கள் எம் காயத்தின் கசிவை உணரும்வரை
உங்கள் செவிகளில் எம் குரல் கேட்கும் வரை
உரத்து கத்துவோம் “யுத்தம் வேண்டாம்”

-றெஜினி டேவிட்-