சனி, 9 ஜூலை, 2011

உலகத் தமிழினத்தின் உயிர் நாடி பேராசான் சிவத்தம்பி!


இறப்பைத் தடுக்க எவரால் முடியும்
எனினும் அழுகின்றோம்...
பிறப்பால் உயர்ந்த பெரியார்
பேராசிரியர் சிவத்தம்பி ஐயாவின்
இறப்பை எண்ணி பெரிதும்
வருந்துகின்றோம்...

தமிழ் மக்களின் ஆய்வியல் அடையாளமாய்
மும்மொழிகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற
முத்தமிழ் அறிஞராய்...
எம் தேசத்துக்கு நீங்கள்
ஆற்றிய பணிகள் ஒன்றா இரண்டா...


உலக மொழிகளுக்கெல்லாம் ஈழத்தமிழின்
சுவையை உணர வைத்த உத்தமர்...
பிறமொழிச் சொற்களை
தமிழ்ப் படுத்துவதில் வெற்றி கண்ட வித்தகர்...
இன்று எம்முடன் இல்லை
என்பதை ஏற்க மறுக்கிறது உள்ளம்...

வளமான சிந்தனையும்
சிறப்பான எண்ணங்களும்
கொண்டு திக்கெட்டும் புகழ் பரப்பி
நீங்கள் செய்த சாதனைத் தமிழ்ப் பணிகள்
பாருள்ளவரை நிலைத்திருக்கும் இது உறுதி...

யோகர் சுவாமிகளால்
ஆசீர்வதிக்கப்பட்ட யோக புரிசராய்...
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற புலமைகளின் பொக்கிசமாய்...

இலக்கிய வானிலே ஒளிவீசிப்
பிரகாசித்த உங்களின் இழப்பு...
ஒட்டு மொத்த கலை உலகுக்கும்
ஈடு செய்ய முடியாத இடை வெளியை
ஏற்படுத்திய பேரிழப்பு...

காலத்தால் அழிக்க முடியாத எழுத்துக்களின்
கலங்கரை விளக்கமாய்
நன்னெறி காட்டி உபதேசங்கள் பல புரிந்து
பேராசிரியர்க்கெல்லாம் பேராசானாய்...

இரக்க மனமும் கசிந்துருகச்
செய்யும் இலக்கிய வளமும்
இனிமையான சொற்பேச்சும்
காணமல் போனது கண்டு
கலைகளின் அதிபதியும் ஒருகணம்
கலங்கித் தான் போனாளோ...

கடல் நீர் வற்றிப் போக கண்ணீர் மழை வந்து
மனித முகங்களை நிறைத்ததுவோ...
பல்துறை ஆளுமை விற்பன்னராய்...
தோண்டத் தோண்ட பலன் கொடுக்கும்
அனைத்துத் துறை ஆய்வுகளின் அற்புதச் சுரங்கமாய்...

எம் இதயங்களை வென்ற
இமயம் சாய்ந்து போன
செய்தி கேட்டு வெந்த புண் போல
எம் மனம் வெதும்பித் தவிக்கிறது...

பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்து
பார் போற்றும் வண்ணம் தமிழ்ப் பணிகள்
ஆற்றி நின்ற உவமை சொல்ல முடியாத
உலகப் புகழ் பெற்ற உததமரே
அடுத்த ஒரு பிறப்பிருந்தால்
நீவிர் ஈழத்தில் வேண்டும் மீண்டும்...
நன்றியுடன் தருகிறோம் உமக்கு இறுதி விடை...

-குறிஞ்சிக்கவி செ. ரவிசாந், குப்பிளான்-