வெள்ளி, 30 அக்டோபர், 2009

சுதந்திரம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்- நாம்
அடிமையாக வாழ்ந்து விட்டோம்?
இன்னும் எத்தனை ஆண்டுகள்- நாம்
இருட்டில் வாழப் போகின்றோம்?
உயிரைக் காத்து என்ன பயன்?- நாம்
உலகில் வாழ்ந்து மடிவதனால்
எரியும் சாம்பல் தான் மிஞ்சும்- நாம்
ஏற்றம் காண்பதெப்போது?

அடிமையாக வாழ்வதை விட - நாம்
ஆயிரம் படிகள் தாண்டிடுவோம்!
இறைவன் என்பவன் இருக்கும் வரை - நாம்
இன்பம் என்றும் எய்திடுவோம்.
உலகில் காணும் கலைகளை- நாம்
ஊக்கத்தோடு கற்றிடுவோம்.
எளிமை கண்டு இரங்கிடுவோம்- நாம்
ஏற்றம் என்றும் அடைந்திடுவோம்.

அமைதி கொண்டே என்றும்- நாம்
அடிமைப் பேயை ஓட்டிடுவோம்!
இளமை இருக்கும் போதே- நாம்
இழிவு நிலையை நீக்கிடுவோம்.
உணர்ச்சி கொண்டு பொங்கியே- நாம்
உழைப்பை நன்கு வளர்த்திடுவோம்.
ஏழை எளியவர்க்கெல்லாம்- நாம்
எழுதிக் கற்றுக் கொடுத்திடுவோம்.

அகிலம் என்ற அவனியிலே- நாம்
அடிமைத் தீயைப் போக்கிடுவோம்.
இழைக்கும் துயர்கள் யாவற்றையும்- நாம்
இன்பத்தோடு போக்கிடுவோம்.
உழைக்கும் கரங்கள் அவற்றை- நாம்
ஊழி வரை காத்திடுவோம்
எழுதும் கரங்கள் அவற்றை- நாம்
ஏற்றதிற்குக் கொண்டு செல்வோம்.

“சுதந்திரம் ! சுதந்திரம் !” என்றே- நாம்
சுதாகரித்து எழுந்திடுவோம்.
சுற்றமுஞ் சூழலும் இன்புறவே- நாம்
சுகமும் வாழ்வும் கண்டிடுவோம்.
சரித்திரம் ஒன்று படைத்திடுவோம்- நாம்
சாதி வேற்றுமையை ஓழித்திடுவோம்.
சுதந்திர நாட்டை உருவாக்கவே- நாம்
“சுதந்திரம்” என்ற குரல் எழுப்பிடுவோம்!

வெள்ளி, 2 அக்டோபர், 2009

தீர்வு ஒன்று தந்திடு தீபத் திருநாளே.....


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபஒளி ஏற்றிடும் தீபத்திருநாளே!

சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்

சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து

நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே

தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க

திக்கெல்லாம் நம்புகழ் தித்தித்து ஒலிக்க

தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்

அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்

சண்டைகள் யாவும் ஒழிந்து

சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்

பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்

பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்

பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி

பாரில் இன்பம் கொண்டு வாராய்!

அவனியில் தமிழர் எங்கள்

அவலங்கள் யாவும் அகன்றிட

மலர்ந்திடுவாய் தீபத் திருநாளே!

அகதிகள் அனாதைகளாய்

அவதியுறும் அனைவருக்கும்

அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு

ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு

அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி

அகிலத்தில் ஆனந்தமாய் நாம் வாழ

அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!