வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சிசுக்கள் வேகும் அடுப்பு!


செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புக்கள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முட்கம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தை தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தை சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும் அவளை புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புள் கொடிகளை அறுத்து
பன்னிக்குடங்களை உடைத்தாள்
இரத்தம் பெருக்கெடுக்க
அவள் இரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்.

நன்றி - தீபச்செல்வன்