வியாழன், 25 மார்ச், 2010

விலக்கி விடு போதையை...


மது தரும் மயக்கமெல்லாம்
விதி செய்யும் வேலையென்று
சதி செய்யும் உன் வாழ்க்கை
சாவிற்கே கொண்டு செல்லும்
கதியென்று மதுவை நினைத்திராதே
காவும் நோய்க்கு ஆளாகாதே
கனவுக்கான உன் போதை
கலக்கத்தை உண்டு பண்ணும்
போதை தன்னில் நீ மீண்டால்
பூமி தன்னில் நீ உயர்வாய்!

பல காலமாய் நீ சேர்த்த
பல நூறு நன்மைகள் தானும்
சில நாழிகைக்குள்
சிதைவுறாமலிருக்க
சிந்தித்து நீ பார்த்தால்
சிதையாது உன் வாழ்க்கை!
அலைமோதும் மனம் தன்னில்
விலையாக ஏன் போதை....?
எதிர்பார்ப்புக்கள் நிறைந்த
உன் வாழ்வு
எரிந்து போக விடலாமோ?

விரும்பாதே போதையை
வெறுப்பாகிப் போகும்
உன் வாழ்வு
கரும்பாக உன் மனத்தைக்
கட்டி நீ வைத்திருந்தால்
காலமெல்லாம்
இவ் உலகம் உன் காலடியில்!

சூரியனாய் நீயிருந்தால்
சுற்றி வரும் பல கோள்கள்
சுழன்று போகாமல் உன் மனதை
விலங்கிட்டுக் காத்திருப்பாய்
விலகும் உன் துயரெல்லாம்
துலங்கும் உன் பெயர் கூட...!

அல்லல்ப்படும் வாழ்க்கைக்குப்
போதை அது வழியல்ல!
புரிந்து கொள் உன் வாழ்வை
தெரிந்து விடும் உன் பாதை!
விரும்பி அதை வெறுத்துவிடு
விளையும் வெளிச்சம்
உன் வாழ்வில்!

வெள்ளி, 19 மார்ச், 2010

விழிப்பு


இருட்டுக்குள்ளே
இமைத்துக் கொண்டிருந்த
என் கண்களுக்கு
விழிப்பு வந்தது - மெதுவாக
விழித்துப் பார்க்கிறேன்.
மனிதன் நவ நாகரீகத்தில்
மோகம் கொண்டு - அதன்
போர்வைக்குள் அகப்பட்டு
உணர்வூட்டுவாரின்றித்
தினம் தினம் சீரழிகின்றான்!

சந்தியிலே நிற்கின்ற
இளைஞர்களினால்
வேலைச்சுமை தாங்க முடியாது
வெந்து கொள்ளும் அம்மாமார்...
தினமும் நெற்றி வியர்வை
சிந்தச் சிந்த
குடும்பத்துக்காய் உழைத்து
ஓடாய் இளைத்து
வீட்டுச் செலவுக்கே
காசில்லாது சினம் கொள்ளும்
அப்பாமார்...

பக்கத்து வீட்டுக் குடிகார
அப்பனின் குடியால்
அவன் குடும்பம் அன்றாடம்
அவதியுற்று நடுத்தெருவில்
நிற்கும் நிலை
அச்சச்சோ! அவன் வாயால்
சகிக்க முடியாத
உச்சரிப்புக்கள்.

சீதனக் கொடுமையால்
ஆசைகளை வீட்டிலே
பூட்டி வைத்து
அழகு பார்க்கும் பெற்றவர்கள்.
பெற்றெம்மையெல்லாம்
பேணி வளர்த்தாளாக்கிய
அம்மா, அப்பா
யாருமற்ற அனாதைகளாய்த்
தஞ்சம் புகும் முதியோர் இல்லம்.

ஐயோ இதென்ன கொடுமை!
என்னால் இவற்றைப்
பார்க்கவே முடியவில்லை
மீண்டும் கண்களை நான்
இறுக மூடிக் கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

பெண் விடுதலைக்காய்........


மார்ச் 08 பெண்கள் தினத்தை முன்னிட்டு.........

கல்விக் கண் திறக்கச் செய்வோம்
கசடுகளை ஓயச் செய்வோம்
முகில்களைக் கிழிக்கச் செய்வோம்
முறம் கொண்டு எழுந்து நிற்போம்

விண்வெளியில் களமமைப்போம்
மண்ணுலகைப் பொன்னுலகாக்குவோம்
பூவையரின் விழி நீரைப்
புயலாக மாறச் செய்வோம்

பொங்கியெழுந்தே புதியதோர்
சரித்திரம் படைப்போம்
கொழுந்து பறிக்கும் கைகளைக்
ஏட்டைப் பிடிக்கச் செய்வோம்

பானை பிடிக்கும் கைகளால்
பாரை வாழ வைப்போம்
நெஞ்சத் துணிவு கொண்டு
நீதிக்காய்த் தினம் உழைப்போம்

தொட்டிலாட்டும் கைகளால்
நாட்டைக் கட்டியாளச் செய்வோம்
வெட்டிப் பிளந்தாலும்- பெண்
விடுதலைக்காய் போராடுவோம்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

பெண் கவிகள்


நான் படித்த கவிதைகளிலேயே என் நெஞ்சை உலுக்கிய வரிகள் இவை. இதை வாசகர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

“.....அடுத்த ஆண்டும் வசந்தம்
ஆர்ப்பாட்டமாய் வரும்
அடுத்த ஆண்டும்
கொல்லையில்
தேன் சிட்டு முட்டையிடும்
முட்டையை நேசப்பார்வையில்
அடைகாக்க நானிருக்க மாட்டேன்.
அருவருத்தாலும்
நினைவில்
அசையாமல் நின்று போன அட்டையைக் கண்டலற
நானிருக்க மாட்டேன்.
வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும்
மழை நாள் இரவில்
பேசித்தீர்க்க நானிருக்க மாட்டேன்...
அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்....”
- வெண்ணிலா -

“....கண்ணகியைப் பேச
கண்ணகியே எழுந்திருந்தால்
மதுரைக்குப் போய்
மன்னன் முன் சிலம்பை உடைத்து
தெய்வமாகி இருக்கமாட்டாள்.
புகாரியிலேயே கோவலனின்
மண்டையை உடைத்து
மனுஷியாகி இருப்பாள்.
சீதையைப் பேச
சீதையே எழுந்திருந்தால்
அக்னிப் பரீட்சைக்கு
இராமனையும் இழுத்திருப்பாள்.
ஆம் பெண்ணே
உன்னைப் பேச நீயே எழு.....
- அறிவுமதி -

“....எனக்கு
முகம் இல்லை.... இதயம் இல்லை....
ஆத்மாவும் இல்லை....
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்.... நீண்ட கூந்தல்
சிறிய இடை..... பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல், படுக்கையை விரித்தல்,
குழந்தையைப் பெறுதல், பணிந்து நடத்தல்.
இவையே எனது கடமைகள் ஆகும்.....”
-சங்கரி -

“.... ஆறு மணிக்குள்
அவசரமாய் முடிக்க வேண்டும்.
பெண் விடுதலை பற்றிய என் பேச்சை
ஐந்து நிமிடம் தாமதமாய்ப் போனாலும்
அறை விழும் அவரிடம்.......”
- திலகவதி -

“.....பாவம் இந்த மனைவி
இல்லறக் கிரிக்கட்டில்
சமையலறைக்கும்
படுக்கையறைக்கும்
ரன்கள் எடுத்தே ரணமாய்ப் போனாள்.....”
- வைரமுத்து -

“.....கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும் நீங்கள்
கேட்ட வருணனை கொஞ்சங்களோ
இறக்கை வெட்டிய கிளிகளாய் - நீங்கள்
எத்தனை காலம் இக் கூண்டுக்குள்ளே......”
- இன்குலாப் -

“.....ஆரம்பமாயிற்று
என் மீதான விசாரணை
நடக்க வைத்துப் பார்த்ததில்
புன்னகை பூத்தனர் என்னைப் பிடித்திருப்பதாய்
நீண்டிருந்த பட்டங்களைக் கேட்டபடி
சிற்றுண்டித் தட்டுக்களும் தேநீர்க் கோப்பைகளும் காலியாயின
பற்றியிருக்கும் என் அரசுப் பணியை அறிந்ததும்
கைகளில் திணித்தனர் தாம்பூலத்தை
சம்பள விவரத்தைப் பட்டியலிட
குறித்தே விட்டனர் கல்யாணத் தேதியை
எதற்கும் இருக்கட்டுமென
கவிதை எழுதுவதை கடைசியில் சொல்லி வைத்தேன்.
வந்தவர்கள் எழுந்தனர்
வாயிலை நோக்கி...."
- சுகிர்தராணி -

திங்கள், 1 மார்ச், 2010

பாசந்தனை பற்றறுக்கும் மாசி மகத் திருநாள்!


மாசித்திங்கள் மக நட்சத்திரத்திருநாள்
மக்கள் பாசப் பற்றறுக்கும்
மகேசன் பெருநாள்!
வருணனின் பிரம்மஹத்தி தோஷப் பீடிகையை
விட்டொழிக்கவென்று
தேவர் வேண்டி நின்ற போது
கருணையே வடிவான
கருணாமூர்த்தி நின்
கடைக்கண் பார்வை
பெற்றருள் பெற்ற நன்னாள்!

கணக்கில்லா ஆசைதனை
விதைத்து நின்று
திசையில்லா வாழ்வதனைத்
திருப்தியென்று
பாசத்த்ழைகளுள் தினமும்
சிக்கித் தவித்தே
பாரிய வாழ்வதன் பொருளறியாது
மாளுவர் ஆயிரம்
மானிடர் தினம்.

பெரியவர் இவர்
சிறியவர் அவர் என்றே
அகந்தனில் மமதை கொண்ட
மானிடரின் சிந்தை
தெளியவென்று சிறப்புற்ற ஒருநாள்
மாதொரு பாகனின் மலர் பாதம் பற்றி
மாசிமகத் திருநாளில் அவனருள் பெற்றிட
பாசமாம் “பற்றறுத்துப் பாரிக்குமாரியவன்”
மோட்சம் பெற்றுயர
சாந்தியும் சமாதானமும்
தழைத்தோங்க
வேண்டி வழிபடுவோம்.