வெள்ளி, 22 ஜனவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....!


தமிழன் தன் தாய்மொழியைப் புகழ்ந்தான் - போற்றினான் - தலையில் வைத்துக் குதித்தான் - காப்பாற்றவில்லை.
சொந்த மொழி அழியப் போகிறதே என்னும் கவலை கொஞ்சமும் இன்றி வந்த
மொழிக்கெல்லாம் தமிழன் வாசல் திறந்தான்.

தமிழ் மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பது தெரிந்தும் தமிழன் பிற
மொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான்.

“வீட்டுக் கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும்
கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும்
கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ
ரிக்சாவில் தப்பி ஓடிய போது தகவல் அறிந்த பொலிஸ் ஏட்டு விரட்டி
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின”.

செய்தி ஏட்டில் ஒரு திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான்
என நினைக்கிறோம்.

ஆனால்........

தமிழா இது?

‘சாவி’ - போர்த்துக்கீசிய மொழி, ‘பீரோ’ - பிரெஞ்சு மொழி,
‘துட்டு’ - டச்சு மொழி, ‘கோணி’ - இந்தி மொழி, ‘பப்பாளி’ - மலாய் மொழி,
‘சப்போட்டா’ - யப்பானிய மொழி, ‘கொய்யா’ - பிரேசிலிய மொழி,
‘சுமார்’ - பெர்சிய மொழி, ‘வயது’ - சமஸ்கிருத மொழி,
‘கில்லாடி’ - மராத்தி மொழி, ‘ஆட்டோ’ - கிரேக்க மொழி,
‘ரிக்சா’ - யப்பானிய மொழி, ‘தகவல்’ - அரபி மொழி,
‘பொலிஸ்’ - இலத்தீன் மொழி, ‘ஏட்டு’ - ஆங்கில மொழி, ‘துப்பாக்கி’ -
துருக்கி மொழி, தோட்டா - உருது மொழி.

எந்த மொழியையும் தமிழன் எற்றுக் கொள்வான் என்பதற்கு இதை விடச்
சான்று தேவையில்லை.

இலங்கையிலும் தமிழன் மொழி இழந்து இனம் மாறிப் போனான் என்பதே வரலாறு. இலங்கை என்பது தூய தமிழ்ச்சொல். இலங்குதல் - ஒளி விடுதல்
என்பது தான் வேர்.

சிங்களவன் இன்று ‘லங்கா’ என இலங்கையை அழைக்கிறான். ‘லக்’ என்ற
வட மொழிச் சொல்லில் இருந்தே ‘லங்கா’ வந்தது என்கிறான் சிங்கள ஆய்வாளன்.

ஆனால்,

காலம் காலமாய்ச் சிங்களவர்களின் பெயர்களிலே ‘இலங்கை’ என்ற தூய தமிழ்ச் சொல் ஒட்டிக் கொண்டிருப்பதை எவருமே சுட்டிக் காட்டுவதில்லை.

இலங்கை ரத்னா, இலங்கை கோன் என்று சிங்களவர் பெயர்கள் உண்டே தவிர- லக்ரத்னா, லக்கோன் என்றோ சிங்களவர் பெயர்கள் உண்டா?

பைந்தமிழ் ஈழத்தில் - மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியமர்ந்த போர்த்துக்கீசர்க்ள் இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்த்துக்கீச மொழியிலேயே உரையாடுகிறார்கள்.

ஆனால்,

150 ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் தீவுக்குப் போன தமிழர்கள் தாய் மொழியாம் தமிழை முற்றிலுமாக மறந்து கிரியோல் மொழிக்காரர்களாய் ஆங்கில மொழிக்காரர்களாய் மாறிப் போனார்கள்.

காலையில் மகனைப் பார்த்து ‘பல்லை Brush பண்ணு’ என்கிறான். பின்பு ‘Body wash பண்ணு’ எங்கிறான். அப்புறம் ‘Tiffin பண்ணு’ என்கிறான். பிறகு ‘Dress பண்ணு’ என்கிறான். பின்பு ‘Ready பண்ணு’ என்கிறான். பின்பு பெரியவரை ‘Meet பண்ணு’ என்கிறான். பிறகு ‘அங்கேயே stay பண்ணிடாதப்பா - Return பண்ணிடு’ என்கிறான்.

இவர்கள் வாயில் பண்ணுதல் என்ற தமிழ்ச்சொல்லை விட்டால் தமிழ் இல்லை.

கடைத்தெருவில் இறங்கினால் ‘ லாண்டரி’, ‘ஏர் கட்டிங் சலூன்’, ‘ஓட்டல்’, ‘எலக்டிரிக்கல்ஸ்’, ‘டைலர்ஸ்’, ‘கம்பனி’, ‘டெக்ஸ்டைல்ஸ்’, இப்படி

நாளேடுகள் வார இதழ்கள் வாங்கப் போனால் ‘ஜுனியர் போஸ்ட்’, ‘இந்தியா ருடே’, ‘ரிப்போட்டர்’, ‘ஹெல்த்’ இப்படி

துணி வாங்கப் போனால் ‘பாண்ட்’, ‘சர்ட்’, ‘ஜீன்ஸ்’, ‘சாறி’, ‘ஜாக்கட்’ இப்படி

அலுவலகத்தில் நுழைந்தால் ‘டைரக்டர்’, ‘கிளார்க்’, ‘பியூன்’, ‘லாக்கர்’, ‘டிராயர்’, ‘பைல்’ ,

பள்ளிக்க்கூடம் போனால் ‘பிரின்சிபால்’, ‘டீச்சர்’, ‘ஸ்டூடன்ஸ்’, ‘கிளாஸ்’, ‘டெஸ்டு’, ‘றிசல்டு’, ‘பாஸ்’, ‘பெயில்’,

ஏதேனும் தொழில் பார்ப்போம் என்றால் ‘அப்பிளிக்கேசன்’, ‘இன்டர்வியூ’, ‘செலக்சன்’, ‘அப்பாயிண்ட்மெண்ட்’, ப்ரோமோசன்’,

விளையாடப் போனால் ‘கிரிக்கெட்’, ‘புட்பால்’, ‘டெனிஸ்’, ‘ஹாக்கி’, ‘செஸ்’,

நோய் வந்தால் ‘ஹாஸ்பிடல்’, ‘டாக்டர்’, ‘நர்ஸ்’, ‘சிஸ்டர்’, ‘ஆப்ரேசன்’ இப்படி

திரையுலகில் நுழைந்தால் ‘சூட்டிங்’, ‘அவுட்டோர்’, ‘இண்டோர்’, ‘கால்சீட்’, ‘மேக்கப்’, கட் கட் கட் இப்படி

முத்தமிழ் விழா மேடையில் கூட முதலில் முழங்குவது
‘மைக் டெஸ்டிங் ஒன் டூ திரீ!’

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருட வருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் ‘Beware of Dogs’ என்று ஆங்கிலத்தில் எழுதி வைக்கிறான் தமிழன்.

எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழியில் ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும்
‘Use Me’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் குப்பைத் தொட்டி கூட இன்று ஆங்கிலம் பேசும் தலைக்குனிவை யாரிடம் சொல்லி அழுவது.....?

இப்படி நாம் 85% க்கும் அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசும் மொழியை தமிழ் என்று அழைக்கலாமா? இது தமிழல்ல தமிங்கிலம். தமிழ்நாட்டில் எங்கும் தமிங்கிலம்........!

-தொடரும்....-

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சமாதானம் மலரவே பொங்கட்டும்.


போர்வெறி நீங்கவே பொங்கட்டும்
புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்
மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்.

மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்
ஒற்றுமையுடன் வாழவே பொங்கட்டும்
ஒரணி சேரவே பொங்கட்டும்
சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்.

சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்
பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமியெங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்
ஏற்றத்தாழ்வு இல்லாதொழியவே பொங்கட்டும்.

எங்களின் வாழ்வு செழிக்கவே பொங்கட்டும்
ஏர் பூட்டி மக்களெல்லாம் உழவு செய்திடவே பொங்கட்டும்
இன்றே எமக்கு விடிவு கிடைக்கவே பொங்கட்டும்
சர்க்கரையோடு தேன் பயறுஞ்சேர்த்து
மெத்தக் கலந்திங்கு பொங்கட்டும்.

புத்தரிசியோடு புதுப்பாலும் சேர்த்துப்
பொன் வெல்லப் பொங்கல் பொங்கட்டும்
பல் தொழில் பெருகி பல வளமும் பெருகவே
பாங்குடனே மக்களனைவரும் பொங்கட்டும்.

சண்டைகள் நீங்கிடவே பொங்கட்டும்
சாதிகள் ஒழிந்திடவே பொங்கட்டும்
சமரசம் நிலவிடவே பொங்கட்டும்
சமதர்மம் கிடைத்திடவே பொங்கட்டும்.

சக்தி பிறந்திடவே பொங்கட்டும்
சம உரிமை கிடைத்திடவே பொங்கட்டும்
புத்தி மிகுந்திடவே பொங்கட்டும்
பூமியில் மக்களனைவரும் அமைதியுடன் வாழவே பொங்கட்டும்
சகோதரத்துவம் நிலைத்திடவே பொங்கட்டும்
சாந்தியோடு சமாதனம் மலரவே பொங்கட்டும்.

சனி, 2 ஜனவரி, 2010

தமிழ்மொழி எம் தாய்மொழி


தமிழ்மொழி எங்கள் தாய்மொழி
தமிழ்மொழி ஒரு தனிமொழி
தமிழ்மொழி ஒர் அழகிய மொழி
தமிழ்மொழி எம் முதன் மொழி
தமிழ்மொழி ஒரு செம்மொழி
தமிழ்மொழி ஒர் இனிய மொழி
தமிழர் தொன்மைக்குச் சான்றான மொழி
தரணி போற்றிடும் தமிழ் மொழி.

இசையிலே இன்பம் கண்ட மொழி
எண் நுட்பங்கள் பல காணும் மொழி
ஓவியங்கள் பல காணும் மொழி
காவியங்கள் இயற்றும் மொழி
இயற்கை அன்னை அருளிய மொழி
இலக்கணங்கள் பல யார்த்த மொழி
இனிதான கலைகளை வளர்த்த மொழி
என்றுமே குறைவில்லாத சிறப்பு மொழி.

நினைத்தால் நெஞ்சினிக்கும் மொழி
சுவைத்தால் நாவினிக்கும் மொழி
கேட்டால் காதுவக்கும் மொழி
கேட்பவரைக் கொள்ளை கொள்ளும் மொழி
நல்ல சுகந்தரும் இதமான மொழி
தேனை நிகர்த்தினிக்கும் மொழி - எங்கள்
அமிழ்தினும் இனிதான தமிழ் மொழி.

உண்மை மிக்க நக்கீரனார் - நல்ல
உரை வகுத்த தமிழ் மொழி
ஊக்கமுள்ள வீரர் தம்மை
உருவாக்குகின்ற தமிழ் மொழி
வண்மை மிக்க பாண்டியன்
வளர்த்தெடுத்த செந்தமிழ் மொழி
பாராண்ட மைந்தர் நாம் - என்றென்றும்
விழா எடுக்கும் தமிழ் மொழி.

பொதிகை மலையிலே தோன்றிய மொழி
தென்னன் புகழிலே கிடந்த மொழி
சங்கப்பலகையில் இருந்த மொழி
வைகை ஏட்டிலே தவழ்ந்த மொழி
முச்சங்கம் கண்ட மொழி
மும்மன்னர் மடியிலே தவழ்ந்த மொழி
பேதை நெருப்பிலே நின்ற மொழி
கற்றோர் நினைவிலே நின்ற மொழி.

கம்பன் கவிபாடிய மொழி
சயங்கொண்டான் பரணி பாடிய மொழி
புகழேந்தி வெண்பா பாடிய மொழி
காடவன் கலம்பகம் பாடிய மொழி
ஓங்காப் புகழ் தொல்காப்பியன் இலக்கணம் யார்த்த மொழி
ஒளவையார் ஆத்திசூடி பாடிய மொழி
வள்ளுவன் குறளை வாய்மை பெற வைத்தமொழி
வாழ்க்கைக்கு நல்ல வளஞ்சேர்க்கும் மொழி.

தன் காலுக்கு சிலப்பதிகாரத்தை உடைய மொழி
தன் கைக்கு வளையாபதியை அணிந்த மொழி
தன் இடைக்கு மணிமேகலையை பூண்ட மொழி
தன் செவிக்கு குண்டலகேசியை பொருத்திய மொழி
உயிர் மெய் ஆய்தமுடன் இயங்கும் மொழி
குறிலும் நெடிலும் இசைந்தாடும் மொழி
வல்லினம் மெல்லினம் கொண்ட வனப்பு மொழி
வாழ்வை வளமாக்கிடும் எம் தாய் மொழி

அறிவியலுக்கும் அறைகூவல் விடுக்கும் ஆற்றல் மிக்க மொழி
மொழியியலுக்குச் சவால் விடுக்கும் திறன் மிக்க மொழி
வேற்றுமொழிகளுக்கும் சொற்கொடை அளித்த மொழி
பலகிளை மொழிகளுக்கு தாய் மொழி
இறைவன் தனித்திருந்து வளர்த்த மொழி
என்றும் அழியா தெய்வீகம் படைத்த மொழி
சொல் ஏர் உழவரின் நாவில் களிநடம் புரியும் மொழி
கால ஊழிக்கும் இயற்கையின் சீற்றத்துக்கும்
ஈடு கொடுத்து வாழும் மொழி.

சொல்வளம் பொருள்வளம் நிறைந்த மொழி
இயலும் இசையும் இனிய கூத்தும் உடைய மொழி
இளமையும் இனிமையும் இணைந்த தேன் மொழி
இலக்கணத்துக்கு தொல்காப்பியத்தைக் கொண்ட மொழி
அறநெறிக்குத் திருக்குறளைத் தந்த மொழி
முதற் குடிமக்கள் காப்பியத்தைப் படைத்த மொழி
நெற்றிக் கண்ணனுக்கும் குற்றம் வரைந்த மொழி
நீடூழி காலங்கள் தமிழ்ப்பணி செய்ய வைத்த மொழி
தமிழே நீ என்றென்றும் வாழ்க வளர்கவே.