வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதியதோர் உலகம் செய்வோம்.


உழைக்கும் கரங்களே உங்களின் கரங்களை நம்பியே இந்த உலகம்
[உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு... மே 01]


புதியதோர் உலகம் செய்வோம் - அதனைப்
புரிந்துணர்வுடன் பகிர்ந்து கொள்வோம்
புத்துணர்ச்சியுடன் வாழ்ந்தே இவ்வுலகைப்
புனித பூமி ஆக்கிடுவோம்

சாதி சமயங்களும் வேண்டாம் - தினமும்
சண்டை சச்சரவும் வேண்டாம்
சாதியை ஒன்றாய் ஆக்கி - நல்ல
சாதனையொன்று நாம் சமைப்போம்.

முதலாளி தொழிலாளி என்ற
முதலை தனையே ஒழித்திடுவோம்.
மமதை அற்று மானிடராய் வாழ
மாற்று வழியை நாமென்றும் நாடிடுவோம்.

இன மத மொழி வேறுபாட்டை
இன்றே நாம் களைவோம்.
ஏழை எளிய மக்களிடம்
இறக்கம் நாம் காட்டிடுவோம்.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை நாம் கொளுத்திடுவோம்.
மானமுள்ள மனிதராய் வாழ
என்றும் நாமே முயன்றிடுவோம்.

பாட்டாளி வர்க்கம் உயர்ந்திடவே
பாட்டுக்கள் நாமும் புனைந்திடுவோம்.
உழைக்கும் மக்கள் உயர்ந்திடவே
ஊன்றுகோலாய் நாம் இருந்திடுவோம்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

எம் மண்ணின் அழகிய நினைவுகள்...

சனி, 17 ஏப்ரல், 2010

கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்.


[அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் விக்ருதி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19/04/2010ம் திகதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் சிறப்பாக உற்சவம் நடைபெறும்.

வீரமனைப் பதி வாழும் வீரத் தாயே கௌரியம்மா....!
வீரமனைப் பதி வாழுகின்ற
வீரத் தாயே - எம்
வேண்டுதலுக்குத் தலை சாய்க்க
வேண்டுமம்மா.
காலை மாலை உன் பாதம்
பணிகின்றேன்.
வேளை நல்ல வேளையாக
வேண்டுகின்றேன்.

ஆகாதது ஏதுமுண்டோ
வாழ்விலே
அவல வினை அகன்றிடும்
நொடியினிலே
ஓடித் துயரகலும் உன் வாசற்படி
கடந்தால்
உயர்வு பலவும்
அடைவோம் நாம்

பக்தியுடன் என்றும் போற்றிடவே
பலமும் நலமும்
எமக்கு அருள்பவளே!
குப்பிளான் பதியின் குன்றென
மிளிர்ந்து குறை யாவும்
போக்கிஎமைக் காப்பவளே!

உள்ளத்திலே தினம் உன்னைப்
பரவி வழிபடவே
ஊனங்கள் யாவும்
எமை விட்டு விலகிடுமே
கன்னிமார்த் தாயின்
பாதங்களைத் தினம்
தொழுதேற்றவே
கன்ம வினை யாவும்
தொலைந்திடுமே!

சித்திரை தோறும் உன்
மகோற்சவம் காண
திரண்டு வரும்
அடியார் கூட்டம்
சீர் பெருக்கவே - உன்
திரு வீதி வலம் வந்து
திருப்பேறுடன் அருட்பேறும்
பெற்றிடுவர்.

நம்பினோர் கெடுவதில்லை
நம்பியே நாமுன்னைச்
சரணடைந்தோம்
சூலம் பிடித்து வந்து
துயர் யாவும் போக்கி
எமைக் காத்திடம்மா
வேப்பிலை ஏந்தி வந்து - எம்
வெவ்வினையை நீ
களைந்திடம்மா!

புதன், 14 ஏப்ரல், 2010

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு தீர்வொன்று எமக்குத் தந்துவிடு...


[உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்]

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
தீர்வொன்று எமக்குத் தந்துவிடு
இத்தரை மீதினில் நாம் படும்
இன்னல்களைப் போக்கிவிட வந்துவிடு
நித்தம் உழைக்கும் மாந்தர்களின்
நெஞ்சம் களிப்பில் மூழ்க வந்துவிடு.

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சிறப்பினை எமக்குத் தந்துவிடு
அல்லல்கள் தீரவே வந்துவிடு
அகதி வாழ்வு ஒழியவே வந்துவிடு
சித்திரைத் தாயே வந்துவிடு
சித்திரை மகளே வந்துவிடு.

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சீர்வாழ்வு எமக்குத் தந்துவிடு
சிங்காரச் சித்திரையே வந்துவிடு
சித்திரை ஒளியே வந்துவிடு
விக்ருதி வருடமே வந்துவிடு
சமாதானம் மலரவே வந்துவிடு

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சிறப்பான வாழ்வு எமக்குத் தந்துவிடு
சீரழிந்துள்ள எம் மக்கள் வாழ்வை
சீர்ப்படுத்தி அளிப்பதற்கு வந்துவிடு
சித்திரை புத்தாண்டே வந்துவிடு
தீர்வொன்று எமக்குத் தந்துவிடு.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இதே இரவில்....


நீண்ட மழை ஓய்வின் பின்னால்

இலைகளிலி்ருந்து சொட்டுகிற

துளியின் ஓசைகளை

என்னைப் போலவே சிலர்

இந்த ஜாமத்திலும்

கேட்டுக் கொண்டிருக்கக்கூடும்...

இதே இரவில்...


குடும்பமே படுத்துறங்குகிற

அகதிக் கூடாரத்துள்

அருகிலேயே கிடக்கின்ற

அம்மாவும் பிள்ளைகளும்

உறங்கியிருக்கலா மென்கிற

ஐயப்பாட்டுடன்

தன் இளம் மனைவியின் முடியை

கோதிக் கொண்டிருக்கிற கணவன்

தாயின் செருமலைக் கேட்டு

கையை இழுத்துக்கொள்வான்

இதே இரவில்...

தூங்கும் போது எப்போதுமே

கணவன் மீது கால் கை போடுகிற

பழக்கமுள்ள மனைவி

அவ்ன் காணாமல் போய்

காலாண்டாகியும், அதே பழக்கத்தில்

காலையும் கையையும் தலையணைமேல்

வீசிக்கொண்டிருப்பாள்..!

அதே வீட்டில்

கதவு தட்டப்படுவது போல்

சத்தம் கேட்டு

கனவில் திடுக்கிட்டெழுந்த அவனது தாய்

ஒரு வேளை மகனாக இருக்கலாம்..?

என்கிற அப்பாவித்தனமான

நம்பிக்கையில்

ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்ப்பாள்

இதே இரவில்...


வெளவால் போல் தலைகீழாக

வதை முகாம்களில் தூக்கப்பட்டிருக்கும்

எம்முடைய பிள்ளைகள்

தாங்கொணா வதைகளில் தளர்ந்துபோய்

உலர்ந்து் போகிற ஓலங்களை

எழுப்பிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

இப்போதைய குடாநாட்டின்

இளைஞர்கள்

எதுவுமே நடந்துவிடவில்லை

என்பதுவாய்

மது விருந்தில் திளைத்தபடி

ஊர்ப் பெண்ணொருத்தியை

நடிகையுடன் ஒப்பிட்டு

பேசிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

அடர்ந்த காட்டிற்குள்

விழுப்புண்களோடும் வேதனைகளோடும்

தோழர்கள்

வேகமாக நழுவிக்கொண்டிப்பார்கள்

இதே இரவில்...

கடவுளாலேயே கை விடப்பட்டவனான

நான்

இத்தனை வருடகால

வி்லை கொடுப்பும்

ஒரு கனவினைப்போல்

இரவோடிரவாக

முடிந்து விட்டதென்பதனை

நம்ப முடியாமலும் தாங்க முடியாமலும்

அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும்

ஏதோ ஓர் வைராக்கியத்தில்

வேதனையைத் தீர்க்க

வெற்றுத்தாளில்

வரைந்து கொண்டிருக்கிறேன்

“சிதைகள் ஊன்றப் படுவதற்கான

காரணத்தையும்

விதைகள் முளைக்கப் போவதற்கான

காலத்தையும்”...


தி.திருக்குமரன்

வியாழன், 8 ஏப்ரல், 2010

நிரந்தர சமாதானம் வேண்டும்!


ஏசியில் வாழ்கின்ற
வாழ்க்கையது வேண்டாம்.
ஓசியில் கிடைக்கின்ற
நிவாரணமும் வேண்டாம்.

இடைஞ்சல்கள் ஏற்படுத்துகின்ற
இனவெறியும் வேண்டாம்.
மனங்களை மழுங்கடிக்கின்ற
மதவெறியும் வேண்டாம்.

மனிதனை விலங்காக அலைய விடும்
பணமும் வேண்டாம்.
பாடாய்ப் படுத்தும்
பதவிகளும் வேண்டாம்.

உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும்
போலி உறவுகளும் வேண்டாம்.
உறவுகளைப் பிரிக்கும் இந்தக்
காதலும் வேண்டாம்.

அல்லல் பட்டு வாழும்
அகதி வாழ்க்கையும் வேண்டாம்.
அழிவினை ஏற்படுத்துகின்ற
யுத்தமும் வேண்டாம்.

எம் தாய் நாட்டில்
நிம்மதியாய் நாம் வாழ
நிரந்தர சமாதானம் மட்டும்
வேண்டும்.... வேண்டும்....