திங்கள், 9 நவம்பர், 2009

போர்க்காலச் சூழ்நிலையில் பாதிப்புற்றோருக்கு உதவுதல்



எமது இன்றைய போர்க்காலச் சூழ்நிலையில் சொந்த மண்ணிலேயே அனாதைகள் ஆக்கப்பட்டு உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, ஆதரிக்க உறவினர் இன்றி அல்லற் படுவோரே பாதிக்கப்பட்டவர்கள் என்ற பார்வைக்கு உட்படுகின்றனர். இவ்வண்ணம் கஷ்டப்படுவோருக்கு உதவுதல் எமது எல்லோருக்கும் உரிய தலையாய கடமையாகும். ஆனால் எமது மண்ணில் இருக்கும் பல மக்களுக்குத் தமது பொறுப்புக்கள் பற்றி உணர முடிவதில்லை. ஏதோ தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருந்து விடுகின்றனர். எமது உடன் பிறப்புக்களுக்கு நாம் உதவாவிட்டால் யார் உதவுவது?
பாதிப்புற்றோருக்கு உதவுவதற்காக இன்று நமது நாட்டில் பல அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வமைப்புக்களால் தனித்து நின்று பாதிப்புற்ற மக்களுக்கு உதவ முடியாது. ஆகவே எம் மண்ணின் மைந்தர்கள் தான் அவர்களின் தோளோடு தோள் நின்று உதவ முன் வர வேண்டும். துள்ளி விளையாடித் திரியும் இளம் நெஞ்சங்கள் பயிலும் பாடசாலைகளில் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமோ, பொது இடங்களில் கூட்டங்களை வைப்பதன் மூலமோ பாதிப்புற்றோரின் அவலங்களையும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகளையும் பற்றி பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாதிப்புற்றோருக்கு உதவும் வழிவகைகள் ஆவன :
அவர்களுக்கு உலர் உணவு வகைகளைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆணைப்பசிக்கு சோள்ப் பொரியேனும் நாம் கொடுக்கலாம். இருக்க உறையுள் இன்றி கஷ்டப்படுவோருக்கு குடில்கள், கொட்டகைகள் அமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியும். படிக்க மனம் இருந்தும் தமது கல்வியைத் தொடர முடியாமல் அல்லல்படும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் அறிவுப் பசியை ஓரளவிற்காவது தீர்க்க முடியும்.

பாதிக்கப்பட்டவர்களினுடைய துன்பங்களில் பங்கெடுப்பதன் மூலம் அவர்களைச் சமுதாயம் தனது கீழ்த்தரமான பார்வை கொண்டு பார்ப்பதைத் தவிர்க்க முடியும். அவர்களின் நலனில் அக்கறையுடைய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடமளிக்க வேண்டும். அத்துடன் அவர்களது புனர்வாழ்வு வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் மன உளைச்சலை ஓரளவிற்காகிலும் போக்க முடியும். இதில் அரசின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையில் இருதரப்பிற்குமிடையே இடம் பெறுகின்ற போரினால் அப்பாவிப் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமரவும் முடியும். இந்த செயற்பாடுகளை சர்வதேசக் கண்காணிப்பளர்கள், அமைப்புக்கள் ஊடாக உற்திப்படுத்த வேண்டும். இது இவ்வாறிருக்க நமது பங்கு என்ன? என்பதையும் நாம் சிந்தித்தல் வேண்டும். நிதியுதவி அளிப்பது ஒரு முக்கியமான செயலாகக் காணப்படுகிறது. ஆனாலும் அது மட்டும் போது என்று நினைத்து விட முடியாது. இவர்களது நிலைமைகளை புரிந்துணர்வோடு கருத்தில் கொண்டு நமது நேசக்கரங்களை நீட்ட வேண்டும். மனித நேயத்தைப் பெருக்கி மனநிறைவினை அவர்களிடம் ஏற்படுத்த நாம் அனைவரும் முன் வர வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இதனை உண்ர்ந்து செயற்பட நாட்டு மக்கள் அனைவரும் முன் வர வேண்டும்.