திங்கள், 22 நவம்பர், 2010

துகிலுரியும் துச்சாதனர்களின் தலை கொய்வோம்!



அதிகாரம் கொண்ட அந்நியர்களின்
கோரப் பிடிக்குள் அகப்பட்ட
அபலைகளின் வாழ்வு - இன்று
கண்ணீரால் சூழப்பட்டும்
கவலைகளால் நிரப்பப்பட்டும்
யாரும் தேடுவாரற்றுக் கிடக்கிறது!


வலுக்கட்டாயமான
பாலியல் இம்சைகளுக்குள்
வலிந்து தள்ளப்படும் - எம்
வனிதையர் வாழ்வு கண்டு
வளர்ந்து வரும் எம் இளநெஞ்சம்
கொதியாய் கொதிக்கிறது!
ஏ! சமுதாயமே! இன்னும்
எத்தனை காலங்களுக்குத் தான்
உன் கண் முன்னால் நடக்கும்
அநியாயங்களையும் அக்கிரமங்களையும்
கண் கட்டி வாய் பொத்தி
மௌனியாய் பார்த்திருக்கப்
போகிறாய்...?


உரிமைகள் தர மறுத்ததால்
உன் உணர்வுகளும் ஒன்றாக
பலிக்கடா ஆக்கப்பட்டு
விட்டதா...?


எங்களுர்ச் சீதைகள்
மாற்றான் தோட்டத்து மல்லிகையாக
மணம் பரப்பினால்
எம்மூர் ராமர்களின் நிலை
என்னாவது ...?


எம் வாழ்வின் வசந்தங்களை
எவனோ ஒருவன் வலுக்கட்டாயமாக
அனுபவித்துப் போக
இன்னும் எத்தனை காலங்கள் தான்
நாம் அனுமதி வழங்கிக்
காத்திருப்பது...?


எங்கள் உடன்பிறந்தவர்களின்
உயிரணுக்குள்
இரத்த சம்பந்தமே இல்லாத
எங்களின் நிரந்தர எதிரிகள் உடலில்
ஐக்கியமாக விட்டு விட்டு
அடங்கிக் கிடக்க நாமென்ன
ஆண்மையற்ற பேடிகளா?


செம்மணியில் அன்று கிருஷாந்தி
வேலணையில் இன்று தர்ஷிகா
நாளை யார் யாரோ!


இவர்கள் அனுபவித்த அவலநிலை
நாளை எங்கள் உறவுகளுக்கு
ஏற்படாது என்பதற்கு
என்ன தான் இங்கு உத்தரவாதம்?


கல்யாணக் கனவுகளை கண்களில் சுமந்து
அகதி முகாம்களில் அடைக்கலம்
தேடிய அரிவையர் வாழ்வு
காமுகரின் காமத்தனத்தால்
களவாடப்பட்டதால் கனவாய் போன
காரிகையர் வாழ்வை
ஒரு கணம் நினைத்து பார்த்தாயா...?


என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் சொந்தங்கள்... ?
இனியும் வேண்டாம்
எம் குலப் பெண்களுக்கு
இப்படியொரு இழி நிலை

வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சும் வகையில்
செயற்படும் துகிலுரியும்
துச்சாதனர்களின் தலை கொய்யும்
தருணம் வந்து விட்டது!


தையலரின் விழிநீர் துடைக்க
தமிழுணர்வுள்ள நாமனைவரும்
ஒன்றிணைவோம்!


தமிழ் மங்கைகளின் தன்மானம்
மண் மீதினில் என்றும்
நிலை பெற வழி செய்வோம்!


-ஆக்கம் - செல்வநாயகம் ரவிசாந்-

திங்கள், 8 நவம்பர், 2010

இடம்பெயர்ந்தோர் என்று...


பண்பும் பாசமும் புற்றெடுத்து
பருவ காலங்கள் தோள் சுமந்து
இன்பம் துன்பம் இரண்டுடனும்


இல்லறத்தில் நாமிணைந்து
இருவர் நாமும் பெற்றெடுத்த
மழலையுடன் மனக் கோட்டையை
மாளிகையாய் கட்டிவைத்து


தினம் தினம் கோலமிட்ட கனவுகளை
நனவாக்க காத்திருந்தோம் பல காலம்,
ஆனாலும் அவை யாவும் ஒருநாளில்
செல்லரித்தது போலச்
செல்லடித்து வீழ்ந்ததுவே!


கனவெல்லாம் கனவேயாகிக்
காணாமல் போனது போல்;
நினைவினிலே நீயும் நானும்
நிஜத்தோடு போரிடமுடியாது;


பெட்டி படுக்கையும் கையுமாய்
நிழல் தேடி நடக்கின்றோம்
கனவெல்லாம் நனவாகுமென்ற
கனமான நம்பிக்கையுடன்...

வியாழன், 4 நவம்பர், 2010

தீர்வு ஒன்று தந்துவிடு தீபத் திருநாளே!


தீப ஒளி ஏற்றிடும் தீபத் திருநாளே!
சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்
சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து
நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே
தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க
திக்கெல்லாம் நம் புகழ் தித்தித்து ஒலிக்க
தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்
அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்
சண்டைகள் யாவும் ஒழிந்து
சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்
பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்
பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்
பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி
பாரில் இன்பம் கொண்டு வாராய்!
அவனியில் தமிழர் எங்கள்
அவலங்கள் யாவும் அகன்றிட
மலர்ந்திடுவாய் தீபத்திருநாளே!

அகதிகளாய் அனாதைகளாய்
அவதியுறும் அனைவருக்கும்
அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு
ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு
அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி
அகிலத்தில் ஆனந்தமாய் நம் வாழ
அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!

கவியாக்கம் - செல்வநாயகம் ரவிசாந்