செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இதே இரவில்....

You are person read this...

நீண்ட மழை ஓய்வின் பின்னால்

இலைகளிலி்ருந்து சொட்டுகிற

துளியின் ஓசைகளை

என்னைப் போலவே சிலர்

இந்த ஜாமத்திலும்

கேட்டுக் கொண்டிருக்கக்கூடும்...

இதே இரவில்...


குடும்பமே படுத்துறங்குகிற

அகதிக் கூடாரத்துள்

அருகிலேயே கிடக்கின்ற

அம்மாவும் பிள்ளைகளும்

உறங்கியிருக்கலா மென்கிற

ஐயப்பாட்டுடன்

தன் இளம் மனைவியின் முடியை

கோதிக் கொண்டிருக்கிற கணவன்

தாயின் செருமலைக் கேட்டு

கையை இழுத்துக்கொள்வான்

இதே இரவில்...

தூங்கும் போது எப்போதுமே

கணவன் மீது கால் கை போடுகிற

பழக்கமுள்ள மனைவி

அவ்ன் காணாமல் போய்

காலாண்டாகியும், அதே பழக்கத்தில்

காலையும் கையையும் தலையணைமேல்

வீசிக்கொண்டிருப்பாள்..!

அதே வீட்டில்

கதவு தட்டப்படுவது போல்

சத்தம் கேட்டு

கனவில் திடுக்கிட்டெழுந்த அவனது தாய்

ஒரு வேளை மகனாக இருக்கலாம்..?

என்கிற அப்பாவித்தனமான

நம்பிக்கையில்

ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்ப்பாள்

இதே இரவில்...


வெளவால் போல் தலைகீழாக

வதை முகாம்களில் தூக்கப்பட்டிருக்கும்

எம்முடைய பிள்ளைகள்

தாங்கொணா வதைகளில் தளர்ந்துபோய்

உலர்ந்து் போகிற ஓலங்களை

எழுப்பிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

இப்போதைய குடாநாட்டின்

இளைஞர்கள்

எதுவுமே நடந்துவிடவில்லை

என்பதுவாய்

மது விருந்தில் திளைத்தபடி

ஊர்ப் பெண்ணொருத்தியை

நடிகையுடன் ஒப்பிட்டு

பேசிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

அடர்ந்த காட்டிற்குள்

விழுப்புண்களோடும் வேதனைகளோடும்

தோழர்கள்

வேகமாக நழுவிக்கொண்டிப்பார்கள்

இதே இரவில்...

கடவுளாலேயே கை விடப்பட்டவனான

நான்

இத்தனை வருடகால

வி்லை கொடுப்பும்

ஒரு கனவினைப்போல்

இரவோடிரவாக

முடிந்து விட்டதென்பதனை

நம்ப முடியாமலும் தாங்க முடியாமலும்

அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும்

ஏதோ ஓர் வைராக்கியத்தில்

வேதனையைத் தீர்க்க

வெற்றுத்தாளில்

வரைந்து கொண்டிருக்கிறேன்

“சிதைகள் ஊன்றப் படுவதற்கான

காரணத்தையும்

விதைகள் முளைக்கப் போவதற்கான

காலத்தையும்”...


தி.திருக்குமரன்

கருத்துகள் இல்லை: