சனி, 2 ஜனவரி, 2010

தமிழ்மொழி எம் தாய்மொழி

You are person read this...

தமிழ்மொழி எங்கள் தாய்மொழி
தமிழ்மொழி ஒரு தனிமொழி
தமிழ்மொழி ஒர் அழகிய மொழி
தமிழ்மொழி எம் முதன் மொழி
தமிழ்மொழி ஒரு செம்மொழி
தமிழ்மொழி ஒர் இனிய மொழி
தமிழர் தொன்மைக்குச் சான்றான மொழி
தரணி போற்றிடும் தமிழ் மொழி.

இசையிலே இன்பம் கண்ட மொழி
எண் நுட்பங்கள் பல காணும் மொழி
ஓவியங்கள் பல காணும் மொழி
காவியங்கள் இயற்றும் மொழி
இயற்கை அன்னை அருளிய மொழி
இலக்கணங்கள் பல யார்த்த மொழி
இனிதான கலைகளை வளர்த்த மொழி
என்றுமே குறைவில்லாத சிறப்பு மொழி.

நினைத்தால் நெஞ்சினிக்கும் மொழி
சுவைத்தால் நாவினிக்கும் மொழி
கேட்டால் காதுவக்கும் மொழி
கேட்பவரைக் கொள்ளை கொள்ளும் மொழி
நல்ல சுகந்தரும் இதமான மொழி
தேனை நிகர்த்தினிக்கும் மொழி - எங்கள்
அமிழ்தினும் இனிதான தமிழ் மொழி.

உண்மை மிக்க நக்கீரனார் - நல்ல
உரை வகுத்த தமிழ் மொழி
ஊக்கமுள்ள வீரர் தம்மை
உருவாக்குகின்ற தமிழ் மொழி
வண்மை மிக்க பாண்டியன்
வளர்த்தெடுத்த செந்தமிழ் மொழி
பாராண்ட மைந்தர் நாம் - என்றென்றும்
விழா எடுக்கும் தமிழ் மொழி.

பொதிகை மலையிலே தோன்றிய மொழி
தென்னன் புகழிலே கிடந்த மொழி
சங்கப்பலகையில் இருந்த மொழி
வைகை ஏட்டிலே தவழ்ந்த மொழி
முச்சங்கம் கண்ட மொழி
மும்மன்னர் மடியிலே தவழ்ந்த மொழி
பேதை நெருப்பிலே நின்ற மொழி
கற்றோர் நினைவிலே நின்ற மொழி.

கம்பன் கவிபாடிய மொழி
சயங்கொண்டான் பரணி பாடிய மொழி
புகழேந்தி வெண்பா பாடிய மொழி
காடவன் கலம்பகம் பாடிய மொழி
ஓங்காப் புகழ் தொல்காப்பியன் இலக்கணம் யார்த்த மொழி
ஒளவையார் ஆத்திசூடி பாடிய மொழி
வள்ளுவன் குறளை வாய்மை பெற வைத்தமொழி
வாழ்க்கைக்கு நல்ல வளஞ்சேர்க்கும் மொழி.

தன் காலுக்கு சிலப்பதிகாரத்தை உடைய மொழி
தன் கைக்கு வளையாபதியை அணிந்த மொழி
தன் இடைக்கு மணிமேகலையை பூண்ட மொழி
தன் செவிக்கு குண்டலகேசியை பொருத்திய மொழி
உயிர் மெய் ஆய்தமுடன் இயங்கும் மொழி
குறிலும் நெடிலும் இசைந்தாடும் மொழி
வல்லினம் மெல்லினம் கொண்ட வனப்பு மொழி
வாழ்வை வளமாக்கிடும் எம் தாய் மொழி

அறிவியலுக்கும் அறைகூவல் விடுக்கும் ஆற்றல் மிக்க மொழி
மொழியியலுக்குச் சவால் விடுக்கும் திறன் மிக்க மொழி
வேற்றுமொழிகளுக்கும் சொற்கொடை அளித்த மொழி
பலகிளை மொழிகளுக்கு தாய் மொழி
இறைவன் தனித்திருந்து வளர்த்த மொழி
என்றும் அழியா தெய்வீகம் படைத்த மொழி
சொல் ஏர் உழவரின் நாவில் களிநடம் புரியும் மொழி
கால ஊழிக்கும் இயற்கையின் சீற்றத்துக்கும்
ஈடு கொடுத்து வாழும் மொழி.

சொல்வளம் பொருள்வளம் நிறைந்த மொழி
இயலும் இசையும் இனிய கூத்தும் உடைய மொழி
இளமையும் இனிமையும் இணைந்த தேன் மொழி
இலக்கணத்துக்கு தொல்காப்பியத்தைக் கொண்ட மொழி
அறநெறிக்குத் திருக்குறளைத் தந்த மொழி
முதற் குடிமக்கள் காப்பியத்தைப் படைத்த மொழி
நெற்றிக் கண்ணனுக்கும் குற்றம் வரைந்த மொழி
நீடூழி காலங்கள் தமிழ்ப்பணி செய்ய வைத்த மொழி
தமிழே நீ என்றென்றும் வாழ்க வளர்கவே.

கருத்துகள் இல்லை: