வியாழன், 22 மார்ச், 2012

செல்லாத நோட்டு!


சின்னப் பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேரூந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக் கொண்டேன்...

கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்...

நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கி விட்டு
ஓட்டுனருக்கு
ரே... ரே... சொன்னார்
நடத்துனர்...

வேகமெடுத்தது பேரூந்து
பூம்.. பூம்... பூம்...

-அ. நிலாதரன்-

வியாழன், 12 ஜனவரி, 2012

போர் வெறி நீங்கவே பொங்கட்டும்..!!


புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்

மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்
மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்

ஒற்றுமையுடன் இருக்கவே பொங்கட்டும்
ஓரணி சேரவே பொங்கட்டும்

சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்
சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்

பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமி எங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்.

என் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...

-குறிஞ்சிக்கவி செ: ரவிசாந் -

சனி, 24 டிசம்பர், 2011

முதலிலிருந்து மீண்டும்...!!


முதலில்
உனது பெயரைத் துடைத்தழி,
உனது வருடங்களைக் கட்டவிழ்த்துவிடு
உனது சுற்றுப்புறங்களை அழித்துவிடு,
நீ எதைப் போலிருக்கிறாயோ அதையும்,
எஞ்சியிருப்பதையும் வேரோடு பிடுங்கு,

பிறகு,
உனது பெயரைத் திரும்ப எழுது,
உனது வயதை மீட்டுப் பெறு,
உனது வீட்டை மறுபடி கட்டு,
உனது பாதையில் நட,

அதன் பிறகு
முடிவற்று,
தொடங்கு, முதலிலிருந்து மீண்டும்...!!

- எகிப்து ஆண்ட்ரி செடிட் -

புதன், 30 நவம்பர், 2011

மறுபடியும் நனைந்தேன் ...!!



மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே"
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா

"சளி பிடிச்சிகிட்டு
செலவு வைக்கப்போற பாரு"
என்றார் அப்பா..

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!!!

(படிச்சதில பிடிச்ச கவிதை ஒன்று....)

வியாழன், 24 நவம்பர், 2011

பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த சேவையாளன்!


குரும்பையூர் பெற்றெடுத்த குணம் குன்றா
குவலயம் போற்றும்
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின்
உயர் சொத்து
எம்மை விட்டு பிரிந்த செய்தி கேட்டு
ஏங்கித் தவிக்கிறது
எம் உள்ளங்கள்...

நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
ஆக்கம், ஆளுமை, அன்பு, அறிவுடைமை
அத்தனையும் ஒருங்கு சேரப் பெற்ற
கல்வி உலகின் கலங்கரை விளக்கே...

உயிருள்ள காலம் வரை
ஆ. சி நடராஜா என்ற உங்கள் அழகிய
நாமத்துக்கு எம் நெஞ்சம் தலை வணங்கும்...

உங்கள் மேல் நாம் வைத்த
உண்மை அன்பின் மீது ஆணை ஐயா
அதிபர் என்ற சொல்லுக்கு அகராதியில் அர்த்தம் தேடினோம்
கண்டு பிடிக்க முடியவில்லை...

இவரிடம் கண்டு கொண்டோம் அதனால் அக மகிழ்ந்தோம்...
பதவி என்ற அந்தஸ்தைப் பாவித்து
பல அராஜகங்களை அரங்கேற்றும்
இத்தேசத்தில் பண்பு நெறி தவறாமல்
பாங்குடனே சேவையாற்றிய வித்தகரே...

பத்திரிகைத் துறை வளர்ச்சியில்
பல்திசையும் போற்ற
நீங்கள் பெற்ற பக்குவமோ
சொல்லில் அடங்காதது...

ஆதரவற்ற ஏழை மக்களை அரவணைத்து
கருணைப்பாலம் மூலம் கரங் கொடுத்து
எத்தனை இடர் வந்தபோதும்

இடப்பெயர்வால் அடுத்தடுத்து
இடம் மாறிச் சென்ற போதும்

கல்லூரியின் தனித்துவத்தை
கட்டிக் காத்த பெருந்தகையாளனின்
காலை மாலை நேரம் பாராது
கல்வி, சமூச சேவையில்
முன்மாதிரியாகத் திகழ்ந்த
ஒப்பற்ற மனத்தினனை
சத்தமில்லாமல் தழுவிச் சென்ற
அந்தக் காலனும் ஓர் சதிகாரனோ...

நாடகத்தில் நல்ல நடிகனாய்
விளையாட்டில் யாவரும் மெச்சிடும் வீரனாய்
கடமை தவறாத கண்ணியவனாய்
நீண்டதோர் சரித்திரம் படைத்த
காவிய நாயகனே...

இருவிழிகள் நீர் ததும்ப விடை தந்தோம்
பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த
உங்களின் ஆன்மா
இறைவனின் பொற்பாதங்களில்
சாந்தியடைய பெற பிரார்த்திக்கிறோம்...

குறிஞ்சிக்கவி செ. ரவிசாந் (வயாவிளான் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவன்)

சனி, 19 நவம்பர், 2011

உன்னை மட்டும்...!


நினைவுகள் நெருஞ்சி
முள்ளாய்க் குத்த
நிர்மூலமாகிக் கொண்டிருக்கும்
என் வாழ்வில்
நிம்மதிக்கேது இடம்?

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே சுமந்தபடி
உன் வரவை
எதிர்பார்த்துக் காத்திருப்பது
இன்னும் எத்தனை காலம்?

துடிக்கின்ற இதயத்தின்
துடிப்பாக நீ இருப்பாய் என்று
அல்லவா நான் நினைத்தேன்.

என்னைத் துடிக்க விட்டு
சென்ற காரணம்
என்னடி என் பிரியசகி...

போகட்டும்...

என்னைப் பிரிவது தான்
உனக்குச் சுகமானதென்றால்
விட்டு விடுகிறேன்...

உன் நினைவுகளையல்ல
உன்னை மட்டும்!

வியாழன், 20 அக்டோபர், 2011

ஆணின் பார்வையில் பெண்...!


உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்..

-சுதேசன்-