வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2012

சித்திரையாளே சிரித்து வாடி.....!


நிலத்தில் எம் வாழ்வு
நிலையான அமைதி
கொள்ள
இத்தரை எங்கும்
இன்பம் வழிந்தோட
சித்திரையாளே
சிரித்து வாடி !

வேற்றுமைகள் நீங்கி
ஒற்றுமை தலைத்தோங்கிட
வேதனையில் உழலும்
சொந்தங்கள் வாழ்வில்
விடியலைத் தர
''நந்தன'' எனும்
பெயர் குடி
சித்திரையாளே
சிரித்து வாடி !

மனைகள் எங்கும்
மங்களம் தித்திக்க
வழிமறிக்கும் தடைகள்களை
உடைத்து
வாழ்வில் முன்னேற
புத்தாடை புனைந்து
புதுமைகள் பல படைக்க
வரம் ஒன்று வேண்டிக்
கரம் கூப்பி நிற்கின்றோம்
சித்திரையாளே
சிரித்து வாடி !

காதலுறு உள்ளங்கள்
கனிப்புடன் கரம் பற்றிட
கருணை காருண்யம்
மனமெங்கும் கரை புரண்டோட
வறுமை பிணிகள் நீங்கி
வாழ்வில் வசந்தங்கள் மலர
இளவேனிற் காலத்து
இளங்கன்னி
சித்திரையாளே
சிரித்து வாடி !

வியாழன், 12 ஜனவரி, 2012

போர் வெறி நீங்கவே பொங்கட்டும்..!!


புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்

மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்
மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்

ஒற்றுமையுடன் இருக்கவே பொங்கட்டும்
ஓரணி சேரவே பொங்கட்டும்

சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்
சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்

பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமி எங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்.

என் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...

-குறிஞ்சிக்கவி செ: ரவிசாந் -

சனி, 15 ஜனவரி, 2011

எம் தேசமெங்கும் அமைதி நிலவச் செய்திடுவாய் தைத்தோழியே!


வந்தது பொங்கல் திருநாள்
வழமை போலவே இம்முறையும்
சிந்தைகள் குளிரப் பொங்கி
சிறப்புடனே தை மகளை
வரவேற்க முடியாத நிலையில்
சொந்தங்களைப் பறி
கொடுத்த சோகத்தில்
எம்முறவுகள்!

யுத்தங்கள் ஒய்ந்து
சத்தங்கள் நின்ற பின்னும்
நிழல் யுத்தம் எம்மண்ணில்
நீண்டு செல்லும்
தொடர் கதையாய்...!

தட்டிக்கொடுக்க ஆளில்லை
என்பதால்
தமிழன் தோளில்
துயர் சுமக்கும் அவலம்
இங்கு...!

விலை வாசி உயர்வால்
நாளும் வெதும்பிடும்
மக்கள் கூட்டம் ஒருபுறம்!

புனர்வாழ்வு முகாம்களில்
நாளும் புழுங்கிடும்
ஒரு கூட்டம் மறுபுறம் !

இங்கிதம் துறந்த
இயற்கையின் சீற்றம் கண்டு
ஏங்கித் தவிர்க்கும்
இதயங்கள் எத்தனையோ...!


இத்தனை துயர்களுக்கு மத்தியில்
எம்மிடையே இன்று
மலர்கின்ற தைப்பாவை நீ
என்ன மாற்றத்தை
எமக்குப் பரிசாக
தரப் போகின்றாய்?

சொல்லு தை மகளே
நீ சொல்லு ?
துயர் கடலுள் தத்தளிக்கும்
எமக்கு உற்ற வழி காட்டிட
ஓடோடி நீயும் வந்துவிடு!

இங்குற்ற கொடுமைகள்
யாவும் அகல;
இன மத மொழி
வேறுபாடு யாவும் நீங்கி
ஏற்றம் பெற்று நாமுய்ய;
தீர்வுப் பொதி சுமந்து
வருவாய் தைத் தோழியே!

எம் தேசமெங்கும்
அமைதி நிலை நீ
மேவிடச் செய்வாய்
தைத் தோழியே!

கவியாக்கம்: செல்வநாயகம் ரவிசாந்

வியாழன், 4 நவம்பர், 2010

தீர்வு ஒன்று தந்துவிடு தீபத் திருநாளே!


தீப ஒளி ஏற்றிடும் தீபத் திருநாளே!
சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்
சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து
நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே
தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க
திக்கெல்லாம் நம் புகழ் தித்தித்து ஒலிக்க
தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்
அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்
சண்டைகள் யாவும் ஒழிந்து
சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்
பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்
பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்
பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி
பாரில் இன்பம் கொண்டு வாராய்!
அவனியில் தமிழர் எங்கள்
அவலங்கள் யாவும் அகன்றிட
மலர்ந்திடுவாய் தீபத்திருநாளே!

அகதிகளாய் அனாதைகளாய்
அவதியுறும் அனைவருக்கும்
அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு
ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு
அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி
அகிலத்தில் ஆனந்தமாய் நம் வாழ
அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!

கவியாக்கம் - செல்வநாயகம் ரவிசாந்

புதன், 14 ஏப்ரல், 2010

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு தீர்வொன்று எமக்குத் தந்துவிடு...


[உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்]

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
தீர்வொன்று எமக்குத் தந்துவிடு
இத்தரை மீதினில் நாம் படும்
இன்னல்களைப் போக்கிவிட வந்துவிடு
நித்தம் உழைக்கும் மாந்தர்களின்
நெஞ்சம் களிப்பில் மூழ்க வந்துவிடு.

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சிறப்பினை எமக்குத் தந்துவிடு
அல்லல்கள் தீரவே வந்துவிடு
அகதி வாழ்வு ஒழியவே வந்துவிடு
சித்திரைத் தாயே வந்துவிடு
சித்திரை மகளே வந்துவிடு.

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சீர்வாழ்வு எமக்குத் தந்துவிடு
சிங்காரச் சித்திரையே வந்துவிடு
சித்திரை ஒளியே வந்துவிடு
விக்ருதி வருடமே வந்துவிடு
சமாதானம் மலரவே வந்துவிடு

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சிறப்பான வாழ்வு எமக்குத் தந்துவிடு
சீரழிந்துள்ள எம் மக்கள் வாழ்வை
சீர்ப்படுத்தி அளிப்பதற்கு வந்துவிடு
சித்திரை புத்தாண்டே வந்துவிடு
தீர்வொன்று எமக்குத் தந்துவிடு.

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சமாதானம் மலரவே பொங்கட்டும்.


போர்வெறி நீங்கவே பொங்கட்டும்
புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்
மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்.

மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்
ஒற்றுமையுடன் வாழவே பொங்கட்டும்
ஒரணி சேரவே பொங்கட்டும்
சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்.

சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்
பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமியெங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்
ஏற்றத்தாழ்வு இல்லாதொழியவே பொங்கட்டும்.

எங்களின் வாழ்வு செழிக்கவே பொங்கட்டும்
ஏர் பூட்டி மக்களெல்லாம் உழவு செய்திடவே பொங்கட்டும்
இன்றே எமக்கு விடிவு கிடைக்கவே பொங்கட்டும்
சர்க்கரையோடு தேன் பயறுஞ்சேர்த்து
மெத்தக் கலந்திங்கு பொங்கட்டும்.

புத்தரிசியோடு புதுப்பாலும் சேர்த்துப்
பொன் வெல்லப் பொங்கல் பொங்கட்டும்
பல் தொழில் பெருகி பல வளமும் பெருகவே
பாங்குடனே மக்களனைவரும் பொங்கட்டும்.

சண்டைகள் நீங்கிடவே பொங்கட்டும்
சாதிகள் ஒழிந்திடவே பொங்கட்டும்
சமரசம் நிலவிடவே பொங்கட்டும்
சமதர்மம் கிடைத்திடவே பொங்கட்டும்.

சக்தி பிறந்திடவே பொங்கட்டும்
சம உரிமை கிடைத்திடவே பொங்கட்டும்
புத்தி மிகுந்திடவே பொங்கட்டும்
பூமியில் மக்களனைவரும் அமைதியுடன் வாழவே பொங்கட்டும்
சகோதரத்துவம் நிலைத்திடவே பொங்கட்டும்
சாந்தியோடு சமாதனம் மலரவே பொங்கட்டும்.