புதன், 29 செப்டம்பர், 2010

என்னதான் 'தவறு'..?


எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை.
இயந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக்
காட்டிலும் எமது உயிர்கள் குறைவான மதிப்பை
உடையனவாகவே இருந்தன.
நாங்கள் கற்களைப் போல,
சாலையோரத்துக் களைச்செடிகள் போல இருந்தோம்.

எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன.
நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம்.
நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை.
நாங்கள் உயிர்வாழவே இல்லை.

எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால்
நாங்கள் ஆயுதங்களை ஏந்தவேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால்
எங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால்
எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால்
எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.

எனவேதான் நாங்கள் போராளிகளானோம்.
எமது மக்கள் சாவதை
எமது மக்கள் ஏமாற்றப்படுவதை
இனியும் நாங்கள்விரும்பவில்லை,
நாங்கள் மறக்கப்படுவதை
இனியும் நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால்
எங்கள் ஆயுதமேந்திய குரலுக்குப் பின்னால்
பெயர்சொல்லி அழைக்க முடியாத
எங்கள் பெயருக்குப் பின்னால்
நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால்
நாங்கள் உண்மையில் நீங்களேதான்.

(நன்றி: எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்)

[இழந்துவிட்ட உரிமைகளை, மறுக்கப்பட்ட சுதந்திரங்களை மீட்பதற்கு உயிரையும் ஆயுதமாக்கிப் போனவர்களின் நினைவாக...]

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

தீர்த்தமாடி எம் வினை தீர்த்தருள்வாய்!

23/09/2010 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவையொட்டி எழுதப்பட்டு உதயன் நாளிதழில் பிரசுரமான கவிதை அப்படியே வலைப்பதிவு நண்பர்களுக்காக....

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

என்னைச் சுற்றியுள்ள பெண்கள்!


அம்மா

உயிர் உலுக்கி
உலகுக்குள் கொண்டு வந்தாள்..
ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..
என்னைச் செதுக்கித்
தமிழனாய் செய்தாள்!..


தங்கை

எனக்காக அழுவாள்..
என்னையும் அழவைப்பாள்..
என் எச்சம் அருந்தியவள்..
ஆருயிர் நண்பியாயும்
அழகிய உறவாயும்
வந்த...என்
தாய்வீட்டுக் கடமை.


நண்பி

அவசரமாய் வரும்
ஆறுதல் வார்த்தைக்கு
சொந்தக்காரி..என் வெற்றிக்கு
குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..
கல்யாணமான பின்தான் காணாமல்
போய்விட்டாள்!!


காதலி

வற்றாத தமிழ்
வார்த்தைககடலில்
குதித்தாள்;..கரைந்து போகாத
என் காதலை
கவிதையாய் கண்டெடுத்தாள்..
தான் மட்டும் படித்து
பெரும் சுயநலவாதியானாள்!!


மச்சாள்

அனுமதி இல்லாமல்
என்அறைக்குள் நுழையும்
அழகிய திமிர்..சின்ன
சூறாவளி..அப்பப்போது
என் சட்டையையும்
அணிந்துகொள்ளும்!.


மனைவி

எழுத இதழ் தந்தாள்..
கோர்க்க விரல் தந்தாள்..
மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்
இளைப்பாற இடம் தந்தாள்..
இவள் என்னைக் குழந்தையாயும் தந்து
தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்
பின் தரமாய் நிற்கிறாள்!!


அத்தை

உபசரிப்பில் கூட
உபத்திரபவம் தரக்கூடாதென்று
நினைத்து..மெதுவாக
பேசும் இன்னொரு அம்மா!..


சித்தி

தொலைதூரத்தில்
வாழ்ந்து..சுகம்
விசாரித்துக்கொண்டிருந்தாலு
நல்லது கெட்டதிற்கு
ஓடோடி வருவாள்
பக்கத்துவீட்டுக்காரி போல்!!


பாட்டி

திட்டித்திட்டி தீர்த்தாலும்
தேவைக்கு பாக்குப் பெட்டி
திறந்து பணம் தரும்..
வயதான தனலட்சுமி..


மகள்

பிறந்ததும்
பிஞ்சுப்பாதங்களால்
முகத்தில் மிதித்தாள்
இதத்தில் செத்தேன்..
வளர்கையில்
பிஞ்சு விரல்களால்
கன்னம் கிழித்தாள்
சுகத்தில் செத்தேன்..
பருவத்தில் காதல் மோகத்தில்
இதயத்தில் மிதித்தாள்..
நிஜமாய் செத்தேன்!!


மருமகள்

காலைக்கட்டிக்கொள்ளவும்
தோளில்தொற்றிக்கொள்ளவும்
அக்காபெற்ற அழகிய பொம்மை!!


பேத்தி

என்மூக்குக்
கண்ணாடியில் மோகம்
கொண்டவள்..கிழ
முதுகேறி சவாரி
செய்யும் சந்ததி
முத்திரை!...

நன்றி : முகம் தெரியா நண்பனுக்கு....

புதன், 14 ஜூலை, 2010

யுத்தத்தின் குரல்


பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானது.
நீல வானம் கறுப்பானது.
எம் பச்சை வயலும் தரையும் சிவப்பானது.
எம் கண்ணீர்பட்டு தண்ணீர் கூட இரத்தமானது.
ஐயோ ஐயோ இது கனவல்ல.

போகும் வழியெல்லாம் இரத்த வாடையுடன் பிரேதங்கள்
இல்லை இல்லை இவர்கள் பிரேதங்களே இல்லை
என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என் அண்ணா, என் நண்பர்கள்.
மனிதர்களை மனிதர்களே அழித்துவிட்டார்கள் . . .

அருகில் இருந்து கட்டியணைக்க ஆசை
கண்ணீர் வற்றும் வரை கதறியழ ஆசை
என்னைச்சுற்றி பல துப்பாக்கி முனைகள்:
பயங்கர ஆண்களால், என் சகோதரியின் உடல்
பலாத்காரப்படுத்தப்பட்டு, பயத்துடன் விறைத்துக் கிடக்கிறது
இரத்தக் கறைகளுடன், கால் இழந்து கையிழந்து தரையில் துவண்டு
அலறும் என் சகோதரர்களின் குரல் அதிகரிக்கின்றது
இறந்த பெற்றாரை எழுப்ப தரையில் கதறும் எம் குழந்தைகளை,
மிதித்து செல்கின்றன, வழி தெரியாப் பாதங்கள் . . .
பயங்கர செல் துண்டுகளிடம் இருந்து – இரு உயிர்களை காப்பாற்ற,
ஓடிய கர்ப்பிணி தாயின் இரண்டு கால்களும், சிதைக்கப்பட்டு தரையில் துடிக்கின்றன
செல் துண்டுகள் என்னையும் சிதைக்க ஓடி வருகின்றன.
நானும் பிணமாகமாட்டேன்.
அந்த பயங்கரமான ஆண்களால் பலாத்காரப் படுத்தப்பட மாட்டேன்
என்னை சுற்றி ஆறாக ஓடும் என் பிள்ளைகளின் இரத்த கண்ணீரையும்,
சிதைந்து கிடக்கும் என் சகோதரனின் உடலையும் தொடர்ந்தும் பார்க்கமாட்டேன்
(எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.)

ஓடினேன் ஓடினேன் முடியவில்லை
உறங்க வீடும் இல்லை.
உயிர் வாழ உணவும் இல்லை.
இரத்த வாடை கொண்ட சிவப்பு ஆடையை மாற்ற துணியும் இல்லை.
காயங்களுக்கு மருந்தும் இல்லை
கட்டியணைக்க கரங்கள் இல்லை
அன்பான வார்த்தைகள் கூற யாரும் இல்லை
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.

பயங்கர கொடுமைக்காரர்கள் எமது கர்ப்பப்பையை சிதைத்தார்கள்
தோழர்களின் கோபங்களால்
எம் காயங்களின் மேல் துப்பாக்கியை நடக்க செய்தார்கள்.
சமாதானம், மனித உரிமை பேசும் எம் நண்பர்கள் கூட
மக்கள் குரல் கேட்காது போனார்கள்.
அயல் நாட்டு நண்பர்கள், இறந்து கிடக்கும்
எம் குழந்தைகளின் உடல் மேல் போர் ஒப்பந்தம் பேசிக் கொண்டார்கள்
பலம் வாய்ந்த தலைவர்கள் தம் பதவி வெறிக்கு
வறுமையில் வாழும் முகம் தெரியா
எம் காக்கி சட்டை சகோதரனை இரையாக்கி கொண்டார்கள்.
உலகநாட்டு பிரதிநிதிகள், பலம் வாய்ந்த ஆண்களை காப்பாற்றுவதிலும்,
பயங்கரவாத சட்டத்தை நிலை நாட்டுவதிலும் அக்கறை கொண்டார்கள்.

எம் நிலைகண்டு: அனைத்தும் கற்பனை என்றார்கள் – என் நண்பர்கள்
சுதந்திரத்தின் இறுதிக் கட்டம் என்றார்கள் – எம் நாட்டின் காவலர்கள்
எம் இரத்தம், எந்தப் பகுதியை சார்ந்தது என்ற பரிசோதனைக்கு தயாரானார்கள் – என் தோழர்கள்
பயங்கரவாதம் என்றார்கள்; – பிற நாட்டு நண்பர்கள்.
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின

பல வழிகளில் என் குரலை உயர்த்தி கூறினேன்:
இல்லை: இவை கனவுகளும் கற்பனைகளும் அல்ல
இல்லை: சுதந்திரமும் அல்ல:
இல்லை: பரிசோதனையும் அல்ல
இல்லை: பயங்கரவாதமும் அல்ல
இவை:
எம் இரத்தக் கண்ணீர்.
இரத்த ஆறுகள்
இரணத்துடன் கிழிந்துகிடக்கும் காயங்கள்.
வலியுடன் இணைந்த குமுறல்கள்
அமைதியை தேடும் விலையற்ற உயிர்கள்.

30 ஆண்டுகளாக – எம் உடல்
துப்பாக்கிகளாலும், செல் துண்டுகளாலும் துளைக்கப் பட்டு
சிதைக்கப்பட்டு வீதியில் கிடப்பது – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?
நின்மதி தேடி, சமாதானம் தேடி,
ஓடும் எம் பாதங்கள் – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?;
எம் குழந்தைகளின் பிரேதங்களை – உன் கண்கள் எப்படிக் காண மறுத்தது?
எம் கர்ப்பப்பையை- உன்னால் ஏப்படி சிதைக்க முடிந்தது?
துப்பாக்கியும் செல்த்துண்டுகளும் பயங்கரமான பாதங்களும்
எம் முகத்தை அழித்துவிட்டது.
எம் குரலை புதைத்து விட்டது

எமது குழந்தைகளின் பிணங்களின் மேல் – நடத்தும் போர்ப் பேச்சு வார்த்தையை நிறுத்து
பயங்கர துப்பாக்கி முனைகளுக்கும், கொடூர கொலைகளுக்கும் துணைபோவதை நிறுத்து
எம்மை, எம் குழந்தைகளின் எதிர்காலத்தை,
அழிக்கும் உன் அநியாய செயல்களை நிறுத்து
வன்முறையை நிறுத்து
இரத்தம் காண்பதை நிறுத்து
பசிக் கொடுமையை நிறுத்து
எம் காயங்களை பார்க்க மறுப்பதை நிறுத்து
யுத்தத்தை நிறுத்து
பயங்கரமான உன் பாதங்களாலும் துப்பாக்கிகளாலும்
எம் குரல் புதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போதிலும்

உங்கள் பாதங்கள் எம் காயத்தின் கசிவை உணரும்வரை
உங்கள் செவிகளில் எம் குரல் கேட்கும் வரை
உரத்து கத்துவோம் “யுத்தம் வேண்டாம்”

-றெஜினி டேவிட்-

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதியதோர் உலகம் செய்வோம்.


உழைக்கும் கரங்களே உங்களின் கரங்களை நம்பியே இந்த உலகம்
[உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு... மே 01]


புதியதோர் உலகம் செய்வோம் - அதனைப்
புரிந்துணர்வுடன் பகிர்ந்து கொள்வோம்
புத்துணர்ச்சியுடன் வாழ்ந்தே இவ்வுலகைப்
புனித பூமி ஆக்கிடுவோம்

சாதி சமயங்களும் வேண்டாம் - தினமும்
சண்டை சச்சரவும் வேண்டாம்
சாதியை ஒன்றாய் ஆக்கி - நல்ல
சாதனையொன்று நாம் சமைப்போம்.

முதலாளி தொழிலாளி என்ற
முதலை தனையே ஒழித்திடுவோம்.
மமதை அற்று மானிடராய் வாழ
மாற்று வழியை நாமென்றும் நாடிடுவோம்.

இன மத மொழி வேறுபாட்டை
இன்றே நாம் களைவோம்.
ஏழை எளிய மக்களிடம்
இறக்கம் நாம் காட்டிடுவோம்.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை நாம் கொளுத்திடுவோம்.
மானமுள்ள மனிதராய் வாழ
என்றும் நாமே முயன்றிடுவோம்.

பாட்டாளி வர்க்கம் உயர்ந்திடவே
பாட்டுக்கள் நாமும் புனைந்திடுவோம்.
உழைக்கும் மக்கள் உயர்ந்திடவே
ஊன்றுகோலாய் நாம் இருந்திடுவோம்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

எம் மண்ணின் அழகிய நினைவுகள்...

சனி, 17 ஏப்ரல், 2010

கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்.


[அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் விக்ருதி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19/04/2010ம் திகதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் சிறப்பாக உற்சவம் நடைபெறும்.

வீரமனைப் பதி வாழும் வீரத் தாயே கௌரியம்மா....!
வீரமனைப் பதி வாழுகின்ற
வீரத் தாயே - எம்
வேண்டுதலுக்குத் தலை சாய்க்க
வேண்டுமம்மா.
காலை மாலை உன் பாதம்
பணிகின்றேன்.
வேளை நல்ல வேளையாக
வேண்டுகின்றேன்.

ஆகாதது ஏதுமுண்டோ
வாழ்விலே
அவல வினை அகன்றிடும்
நொடியினிலே
ஓடித் துயரகலும் உன் வாசற்படி
கடந்தால்
உயர்வு பலவும்
அடைவோம் நாம்

பக்தியுடன் என்றும் போற்றிடவே
பலமும் நலமும்
எமக்கு அருள்பவளே!
குப்பிளான் பதியின் குன்றென
மிளிர்ந்து குறை யாவும்
போக்கிஎமைக் காப்பவளே!

உள்ளத்திலே தினம் உன்னைப்
பரவி வழிபடவே
ஊனங்கள் யாவும்
எமை விட்டு விலகிடுமே
கன்னிமார்த் தாயின்
பாதங்களைத் தினம்
தொழுதேற்றவே
கன்ம வினை யாவும்
தொலைந்திடுமே!

சித்திரை தோறும் உன்
மகோற்சவம் காண
திரண்டு வரும்
அடியார் கூட்டம்
சீர் பெருக்கவே - உன்
திரு வீதி வலம் வந்து
திருப்பேறுடன் அருட்பேறும்
பெற்றிடுவர்.

நம்பினோர் கெடுவதில்லை
நம்பியே நாமுன்னைச்
சரணடைந்தோம்
சூலம் பிடித்து வந்து
துயர் யாவும் போக்கி
எமைக் காத்திடம்மா
வேப்பிலை ஏந்தி வந்து - எம்
வெவ்வினையை நீ
களைந்திடம்மா!