வெள்ளி, 30 அக்டோபர், 2009

சுதந்திரம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்- நாம்
அடிமையாக வாழ்ந்து விட்டோம்?
இன்னும் எத்தனை ஆண்டுகள்- நாம்
இருட்டில் வாழப் போகின்றோம்?
உயிரைக் காத்து என்ன பயன்?- நாம்
உலகில் வாழ்ந்து மடிவதனால்
எரியும் சாம்பல் தான் மிஞ்சும்- நாம்
ஏற்றம் காண்பதெப்போது?

அடிமையாக வாழ்வதை விட - நாம்
ஆயிரம் படிகள் தாண்டிடுவோம்!
இறைவன் என்பவன் இருக்கும் வரை - நாம்
இன்பம் என்றும் எய்திடுவோம்.
உலகில் காணும் கலைகளை- நாம்
ஊக்கத்தோடு கற்றிடுவோம்.
எளிமை கண்டு இரங்கிடுவோம்- நாம்
ஏற்றம் என்றும் அடைந்திடுவோம்.

அமைதி கொண்டே என்றும்- நாம்
அடிமைப் பேயை ஓட்டிடுவோம்!
இளமை இருக்கும் போதே- நாம்
இழிவு நிலையை நீக்கிடுவோம்.
உணர்ச்சி கொண்டு பொங்கியே- நாம்
உழைப்பை நன்கு வளர்த்திடுவோம்.
ஏழை எளியவர்க்கெல்லாம்- நாம்
எழுதிக் கற்றுக் கொடுத்திடுவோம்.

அகிலம் என்ற அவனியிலே- நாம்
அடிமைத் தீயைப் போக்கிடுவோம்.
இழைக்கும் துயர்கள் யாவற்றையும்- நாம்
இன்பத்தோடு போக்கிடுவோம்.
உழைக்கும் கரங்கள் அவற்றை- நாம்
ஊழி வரை காத்திடுவோம்
எழுதும் கரங்கள் அவற்றை- நாம்
ஏற்றதிற்குக் கொண்டு செல்வோம்.

“சுதந்திரம் ! சுதந்திரம் !” என்றே- நாம்
சுதாகரித்து எழுந்திடுவோம்.
சுற்றமுஞ் சூழலும் இன்புறவே- நாம்
சுகமும் வாழ்வும் கண்டிடுவோம்.
சரித்திரம் ஒன்று படைத்திடுவோம்- நாம்
சாதி வேற்றுமையை ஓழித்திடுவோம்.
சுதந்திர நாட்டை உருவாக்கவே- நாம்
“சுதந்திரம்” என்ற குரல் எழுப்பிடுவோம்!

வெள்ளி, 2 அக்டோபர், 2009

தீர்வு ஒன்று தந்திடு தீபத் திருநாளே.....


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபஒளி ஏற்றிடும் தீபத்திருநாளே!

சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்

சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து

நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே

தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க

திக்கெல்லாம் நம்புகழ் தித்தித்து ஒலிக்க

தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்

அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்

சண்டைகள் யாவும் ஒழிந்து

சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்

பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்

பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்

பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி

பாரில் இன்பம் கொண்டு வாராய்!

அவனியில் தமிழர் எங்கள்

அவலங்கள் யாவும் அகன்றிட

மலர்ந்திடுவாய் தீபத் திருநாளே!

அகதிகள் அனாதைகளாய்

அவதியுறும் அனைவருக்கும்

அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு

ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு

அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி

அகிலத்தில் ஆனந்தமாய் நாம் வாழ

அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

உலகுக்கு ஒளி தருவாயா ஒபாமா!


காலமெல்லாம் கடைத்தேற முடியாத

கறுப்பின மனிதரைக்

காத்திடவென்று பிறந்த

மார்ட்டின் லூதர் கிங் போல்

மால்கம் எக்ஸ் போல்

மார் தட்டிக் கறுப்பினம் மகிழவென

பாரினில் வந்துதித்த ஒபாமாவே

உன்

கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்கும்

ஒடுக்கப்பட்ட சிறு இனங்கள்

உன் வரவில் களிப்படைகிறதே

காத்திடுவாய் என்று காத்திருக்கும்

கடைத்தள்ளிய மக்களனைவரினதும்

கனவுகள் நனவாகும்

ஒரு நாள் நீ அரங்கேறிய திருநாள் அன்று

விழி பூத்திருக்கும் எங்களுக்கு

ஒளியூட்டுவாயோ இல்லை

வெள்ளினம் போல் நீயும் திரும்புவாயோ

ஆப்ரகாம் லிங்கனை அடியொற்றி

அரசேறும் உன் பாதை

மக்கள் நலன் காக்க வழி சேர்க்குமா?

காப்போம் பிள்ளைகளை



வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை
உள்ளதைச் சொல்லும் நல்ல பிள்ளை
உணர்ந்தால் உலகத்தில் நல்ல உள்ளம்
உவந்தால் உன்மத்தம் ஆகும் எம் உள்ளம்
கள்ளமில்லா உள்ளத்தின் தாகம் - அதை
கண்டு தீர்ப்பது எம் விவேகம்
காயம் இல்லாத அதன் வேகம்
காப்பது நம் அனைவரது விவேகம்!

சொல்ல நினைக்கும் அவ் உள்ளத்தின்
உணர்வுகளை உணர்ந்தால் அது நம் விவேகம்
காயம் படாது காப்பது நம் கடமை
கண்ணிமை போல் பார்ப்பது நம் உடமை
பிள்ளைகளே உயர் செல்வம் உலகில் - அதை
பூரிக்கப் பார்ப்பது பெரியோர் கடமை!

அன்பினால் ஆவது எதும் இல்லை
ஆரத் தழுவி அரவணைப்பது ஏது தொல்லை?
இல்லை இல்லை உலகில் செல்வம்
உண்டு என்பது பிள்ளைச்செல்வம்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அளவில்லா அன்பை கொடுப்பதே நம் கடமை
ஆசைக்கும் உண்டாமோ அளவில்
அரவணைத்தால் உணரும் அன்பு உள்ளம்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

எனது கவிதை





அன்பில் விளைவதும் கவிதை - நல்ல
அழகில் மலர்வதும் கவிதை
பண்பில் விளைவதும் கவிதை - இந்தப்
பாரில் சிறந்ததும் கவிதை.

என்றும் நிலைப்பதும் கவிதை - எழில்
கொண்டே நிகழ்வதும் கவிதை
குன்றில் வரும் அருவி போல - தொடர்
கொண்டே விளங்குவதும் கவிதை .

வாழ்வை உயர்த்துவதும் கவிதை - மொழி
வளத்தை விளக்குவதும் கவிதை
தாழ்வை அகற்றுவதும் கவிதை - நல்ல
தமிழில் அமைவது தான் கவிதை.

தேனை நிகர்த்தினிக்கும் கவிதை - மென்மைத்
தென்றல் என விளங்கும் கவிதை
வானைப்புவி அழகை எல்லாம் - என்றும்
வாரி வழங்குவது கவிதை.

காலம் கடந்து நிற்கும் கவிதை - உயர்
கருத்தை விளக்கி நிற்கும் கவிதை
ஜாலம் சிறக்க வைக்கும் கவிதை - நல்ல
நடையில் அமைவது தான் கவிதை.

கம்பனின் சொல்லில் - அன்று
மலர்ந்தது இனிமையான கவிதை
கவிஜர்கள் உள்ளத்தில் - இன்று
உதிப்பதும் கவிதை.

பள்ளிச் சிறுவனின் படிப்பிலும் கவிதை
பாவேந்தர் பாடும் பாவும் கவிதை
பரம ஏழையின் வறுமையிலும் கவிதை
பலரது மனத்தைக் கவர்ந்திடும் கவிதை.

இயற்கையின் இனிமை உதிர்வது கவிதை
ஈகையை வார்த்தையில் வடித்திடும் கவிதை
வானம் கடல் புவி அழகையெல்லாம்
வாரியெமக்கு வழங்கிடும் கவிதை.

இன்பத்தின் பெருக்கிலோ இன்பக் கவிதை
துன்பத்தின் கொடுமையில் துக்கக் கவிதை
கிடைக்காத ஒன்றிலோ ஏக்கக் கவிதை
திடீரெனக் குதிப்பது வியப்புக் கவிதை.

புலவர்கள் பாடிடும் பொருளே கவிதை
மன்னர்க்குப் புகழைத் தருவதும் கவிதை
ஆடிப்பாடும் கலையழகிலும் கவிதை
நாடி உலகம் சிறப்புறவே கவிதை.

கற்பனைத் தேரின் சிகரமே கவிதை
காவியப் பொருளின் கருவிலும் கவிதை
தரணி போற்றிடும் தமிழின் கவிதை - என்
கற்பனைத் திறனில் பிறந்திடும் கவிதை.