செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நட்பு பிரியும் தருணம்


காலையில் பூத்து
மாலையில் மடியும்
பூக்களுக்குக் கூட
ஒரு நாள் தான் மரணம்
ஆனால் !

உயிரில் கலந்து
ஒன்றாய்ப் பழகி
ஒன்றாய்க் கூடி
மகிழ்ந்த நட்பு
பிரிகின்ற தருணம்
வருகின்ற போது

பிரிவுக்கு விடை சொல்ல
முடியாமல்
கண்ணீருடன் பிரிகின்ற
கணங்கள் ஒவ்வொன்றும்
மரணம் தான்......

காத்திருப்பு !


உனக்காக காத்திருப்பது
நான் மட்டுமல்ல
உனது நினைவுகளைச்
சுமக்கும்
எனது இதயமும் தான் !

காத்திருக்கும் காதல்
சுகமானது
காலமெல்லாம்
காக்க வைக்கும்
காதல் ரணமானது !

காத்திருப்போம்
காதலிப்போம்
காதல் உலகம் கண்டு
மகிழ்வோம் !

திங்கள், 2 ஏப்ரல், 2012

என் காதல் தேசம் !

என்னைப் பார்த்துப்
பலரும் கேட்கிறார்கள்
நீ யாரையாவது
காதலிகிறாயா என்று!
எப்படிப் புரியவைப்பேன்....?

என் இதயத்தில்
கோயில் கட்டி
பூஜை செய்யும்
என் உயிர் காதலி
அழகிய என் தேசமென்று...!

மீண்டும் சந்திப்போம்!


நட்பென்ற இனிய சோலையிலே
நடை பயின்று நாம் இருவரும்
இன்று பிரிவென்ற
மூன்றேழுத்தால்
பேதலித்து நிற்கின்றோம்...

உன்னைக் காணாத
என் முகம் இன்று
திருந்தி இருந்தும்
எரியாத விளக்காக
பிரகாசிக்க மறுக்கின்றது!

அன்பு என்ற பாலைவனத்தில்
திசை தெரியாப் பறவைகளாய்
நாமிங்கு...

அடுத்த பிறப்பென்று
ஒன்றிருந்தால்
மேகத்தில் ஒன்றாக
நானும் நீயும் சந்திப்போம்!

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஞானம்...!!


ஞானம் பெற்றது
நீ
உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்...
நான்
என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்...

-காசி ஆனந்தன்-

வியாழன், 22 மார்ச், 2012

செல்லாத நோட்டு!


சின்னப் பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேரூந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக் கொண்டேன்...

கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்...

நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கி விட்டு
ஓட்டுனருக்கு
ரே... ரே... சொன்னார்
நடத்துனர்...

வேகமெடுத்தது பேரூந்து
பூம்.. பூம்... பூம்...

-அ. நிலாதரன்-

வியாழன், 12 ஜனவரி, 2012

போர் வெறி நீங்கவே பொங்கட்டும்..!!


புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்

மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்
மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்

ஒற்றுமையுடன் இருக்கவே பொங்கட்டும்
ஓரணி சேரவே பொங்கட்டும்

சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்
சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்

பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமி எங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்.

என் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...

-குறிஞ்சிக்கவி செ: ரவிசாந் -