ஞாயிறு, 8 மே, 2011

அம்மாவுக்காக...

ஞாயிறு, 1 மே, 2011

மேன் மக்கள் தினம்...!


தொழிலாளர் தினம்...
மேன்மைமிகு உழைப்பாளர்களை
மேதினியில் ஏற்றிப் போற்றும் தினம்...
பாலையை சோலையாக்கி பாரினை
உரமாக்கும் மேன்மக்கள் தினம்...

உரிமைக்காக குரல் எழுப்பி
உழைப்புக்கு வழி தேடி
தொழிலாளர்கள் ஒன்றிணைந்த இந்நாளில்
உழைப்பு என்னும் உளியால்
உலகை மாற்றியமைத்த உத்தமர்கள் புகழ் பாடும்...

விடா முயற்சியுடனே வியர்வைத் துளிகளும் சேர்த்து
நம்மூர் விளை நிலங்களை உழுது சமப்படுத்தி
திரைகடல் கடந்து திரவியம் தேடி
நம் தேசத்தின் பொருளாதாரத்தை வளம் படுத்துவோம்...

உழைப்பாளர் நலம் பெறவும்
ஊதியம் சரிவர கிடைத்திடவும்
உற்ற துணையாய் என்றும் இருந்திடும் இத்தினம்...

உழைப்பாளர் பெருமையை இந்த உலகம் முழுவதும்
பறை சாற்றுவோம் இப்பொன் நாளில்...

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சிசுக்கள் வேகும் அடுப்பு!


செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புக்கள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முட்கம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தை தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தை சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும் அவளை புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புள் கொடிகளை அறுத்து
பன்னிக்குடங்களை உடைத்தாள்
இரத்தம் பெருக்கெடுக்க
அவள் இரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்.

நன்றி - தீபச்செல்வன்

புதன், 16 மார்ச், 2011

பிரிவு என்னைப் பொறுத்தவரை பொய்..!


யார் எங்கு போனார்கள்
எதற்கு எதுவுமே புரியவில்லை
என்றென்றைக்குமான அகதியாய்
ஓர் மூலையில் ஒதுங்கி

எதை இழந்தேன்
எதைப் பெறத் தோற்றேன்
வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்
எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்!

அவலம் தரும் பிரிவு வேண்டாம்
பாழ்பட்ட பிரிவினைப்
பழிப்பேன் நான்
வலம் வந்த
இரக்கமற்ற நினைவுகளைப்
பழிப்பேன் நான்

தூக்கமற்று புரள்வதற்காய்
இரவுகள் வருகின்றன
பித்துப் பிடித்தலைவதற்காய்
பகல்கள் காத்திருக்கின்றன

விதியைப்பற்றி எச்சலனமும் இன்றில்லை
வேகமாக அதிர்ந்ததிர்ந்து
ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை

இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில்
பறவைகளைப் பார்த்து ஏங்கி
குறுகுறுத்து ஓய வேண்டும்

- அஸ்வகோஷ் -

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

எனக்குள் பெய்யும் மழை...


என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை

இரவு
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்

இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனது
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலாய் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது

-சிவரமணி-

வெள்ளி, 28 ஜனவரி, 2011

வேதனைத் தூவானம்...


இக்கவிதை இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல், Saturday mail ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தது.

(கவிதையை பெரிதாக்கிப் பார்க்க கவிதையின் மேல் மவுசை வைத்து கிளிக் செய்யவும்)

சனி, 15 ஜனவரி, 2011

எம் தேசமெங்கும் அமைதி நிலவச் செய்திடுவாய் தைத்தோழியே!


வந்தது பொங்கல் திருநாள்
வழமை போலவே இம்முறையும்
சிந்தைகள் குளிரப் பொங்கி
சிறப்புடனே தை மகளை
வரவேற்க முடியாத நிலையில்
சொந்தங்களைப் பறி
கொடுத்த சோகத்தில்
எம்முறவுகள்!

யுத்தங்கள் ஒய்ந்து
சத்தங்கள் நின்ற பின்னும்
நிழல் யுத்தம் எம்மண்ணில்
நீண்டு செல்லும்
தொடர் கதையாய்...!

தட்டிக்கொடுக்க ஆளில்லை
என்பதால்
தமிழன் தோளில்
துயர் சுமக்கும் அவலம்
இங்கு...!

விலை வாசி உயர்வால்
நாளும் வெதும்பிடும்
மக்கள் கூட்டம் ஒருபுறம்!

புனர்வாழ்வு முகாம்களில்
நாளும் புழுங்கிடும்
ஒரு கூட்டம் மறுபுறம் !

இங்கிதம் துறந்த
இயற்கையின் சீற்றம் கண்டு
ஏங்கித் தவிர்க்கும்
இதயங்கள் எத்தனையோ...!


இத்தனை துயர்களுக்கு மத்தியில்
எம்மிடையே இன்று
மலர்கின்ற தைப்பாவை நீ
என்ன மாற்றத்தை
எமக்குப் பரிசாக
தரப் போகின்றாய்?

சொல்லு தை மகளே
நீ சொல்லு ?
துயர் கடலுள் தத்தளிக்கும்
எமக்கு உற்ற வழி காட்டிட
ஓடோடி நீயும் வந்துவிடு!

இங்குற்ற கொடுமைகள்
யாவும் அகல;
இன மத மொழி
வேறுபாடு யாவும் நீங்கி
ஏற்றம் பெற்று நாமுய்ய;
தீர்வுப் பொதி சுமந்து
வருவாய் தைத் தோழியே!

எம் தேசமெங்கும்
அமைதி நிலை நீ
மேவிடச் செய்வாய்
தைத் தோழியே!

கவியாக்கம்: செல்வநாயகம் ரவிசாந்