திங்கள், 6 டிசம்பர், 2010

அண்ணனுக்கு அன்னை!


அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்....!


நன்றி - அறிவுமதி

திங்கள், 22 நவம்பர், 2010

துகிலுரியும் துச்சாதனர்களின் தலை கொய்வோம்!



அதிகாரம் கொண்ட அந்நியர்களின்
கோரப் பிடிக்குள் அகப்பட்ட
அபலைகளின் வாழ்வு - இன்று
கண்ணீரால் சூழப்பட்டும்
கவலைகளால் நிரப்பப்பட்டும்
யாரும் தேடுவாரற்றுக் கிடக்கிறது!


வலுக்கட்டாயமான
பாலியல் இம்சைகளுக்குள்
வலிந்து தள்ளப்படும் - எம்
வனிதையர் வாழ்வு கண்டு
வளர்ந்து வரும் எம் இளநெஞ்சம்
கொதியாய் கொதிக்கிறது!
ஏ! சமுதாயமே! இன்னும்
எத்தனை காலங்களுக்குத் தான்
உன் கண் முன்னால் நடக்கும்
அநியாயங்களையும் அக்கிரமங்களையும்
கண் கட்டி வாய் பொத்தி
மௌனியாய் பார்த்திருக்கப்
போகிறாய்...?


உரிமைகள் தர மறுத்ததால்
உன் உணர்வுகளும் ஒன்றாக
பலிக்கடா ஆக்கப்பட்டு
விட்டதா...?


எங்களுர்ச் சீதைகள்
மாற்றான் தோட்டத்து மல்லிகையாக
மணம் பரப்பினால்
எம்மூர் ராமர்களின் நிலை
என்னாவது ...?


எம் வாழ்வின் வசந்தங்களை
எவனோ ஒருவன் வலுக்கட்டாயமாக
அனுபவித்துப் போக
இன்னும் எத்தனை காலங்கள் தான்
நாம் அனுமதி வழங்கிக்
காத்திருப்பது...?


எங்கள் உடன்பிறந்தவர்களின்
உயிரணுக்குள்
இரத்த சம்பந்தமே இல்லாத
எங்களின் நிரந்தர எதிரிகள் உடலில்
ஐக்கியமாக விட்டு விட்டு
அடங்கிக் கிடக்க நாமென்ன
ஆண்மையற்ற பேடிகளா?


செம்மணியில் அன்று கிருஷாந்தி
வேலணையில் இன்று தர்ஷிகா
நாளை யார் யாரோ!


இவர்கள் அனுபவித்த அவலநிலை
நாளை எங்கள் உறவுகளுக்கு
ஏற்படாது என்பதற்கு
என்ன தான் இங்கு உத்தரவாதம்?


கல்யாணக் கனவுகளை கண்களில் சுமந்து
அகதி முகாம்களில் அடைக்கலம்
தேடிய அரிவையர் வாழ்வு
காமுகரின் காமத்தனத்தால்
களவாடப்பட்டதால் கனவாய் போன
காரிகையர் வாழ்வை
ஒரு கணம் நினைத்து பார்த்தாயா...?


என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் சொந்தங்கள்... ?
இனியும் வேண்டாம்
எம் குலப் பெண்களுக்கு
இப்படியொரு இழி நிலை

வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சும் வகையில்
செயற்படும் துகிலுரியும்
துச்சாதனர்களின் தலை கொய்யும்
தருணம் வந்து விட்டது!


தையலரின் விழிநீர் துடைக்க
தமிழுணர்வுள்ள நாமனைவரும்
ஒன்றிணைவோம்!


தமிழ் மங்கைகளின் தன்மானம்
மண் மீதினில் என்றும்
நிலை பெற வழி செய்வோம்!


-ஆக்கம் - செல்வநாயகம் ரவிசாந்-

திங்கள், 8 நவம்பர், 2010

இடம்பெயர்ந்தோர் என்று...


பண்பும் பாசமும் புற்றெடுத்து
பருவ காலங்கள் தோள் சுமந்து
இன்பம் துன்பம் இரண்டுடனும்


இல்லறத்தில் நாமிணைந்து
இருவர் நாமும் பெற்றெடுத்த
மழலையுடன் மனக் கோட்டையை
மாளிகையாய் கட்டிவைத்து


தினம் தினம் கோலமிட்ட கனவுகளை
நனவாக்க காத்திருந்தோம் பல காலம்,
ஆனாலும் அவை யாவும் ஒருநாளில்
செல்லரித்தது போலச்
செல்லடித்து வீழ்ந்ததுவே!


கனவெல்லாம் கனவேயாகிக்
காணாமல் போனது போல்;
நினைவினிலே நீயும் நானும்
நிஜத்தோடு போரிடமுடியாது;


பெட்டி படுக்கையும் கையுமாய்
நிழல் தேடி நடக்கின்றோம்
கனவெல்லாம் நனவாகுமென்ற
கனமான நம்பிக்கையுடன்...

வியாழன், 4 நவம்பர், 2010

தீர்வு ஒன்று தந்துவிடு தீபத் திருநாளே!


தீப ஒளி ஏற்றிடும் தீபத் திருநாளே!
சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்
சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து
நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே
தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க
திக்கெல்லாம் நம் புகழ் தித்தித்து ஒலிக்க
தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்
அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்
சண்டைகள் யாவும் ஒழிந்து
சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்
பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்
பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்
பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி
பாரில் இன்பம் கொண்டு வாராய்!
அவனியில் தமிழர் எங்கள்
அவலங்கள் யாவும் அகன்றிட
மலர்ந்திடுவாய் தீபத்திருநாளே!

அகதிகளாய் அனாதைகளாய்
அவதியுறும் அனைவருக்கும்
அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு
ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு
அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி
அகிலத்தில் ஆனந்தமாய் நம் வாழ
அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!

கவியாக்கம் - செல்வநாயகம் ரவிசாந்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கிரிக்கெட்டில் ஓர் முடி சூடா மன்னன்!



சுழல் பந்து வீச்சு
முரளிதரன் வாழ்வில்
இது தந்தது
மிகப்பெரும் எழுச்சி!


தொடமுடியாத சிகரங்களை
தொட்ட முதல் வீரன்
மட்டுமா எங்கள் முரளி?


கிரிக்கெட் உலகினில்
கொடி கட்டிப்பறந்ந
முதல் தமிழனும் கூட....!


தூஸ்ரா சர்ச்சையை
துணிவுடன் எதிர்கொண்டு
சோதனைக் களங்களை
சாதனைக் களங்களாக
மாற்றிக் காட்டியவன்!


சர்வதேச அளவில்
தனது அணியை
தலை நிமிரவைக்க
தூண்டு கோலாய் அமைந்த
முரளியின் உலக சாதனையை
முறியடிக்க இனி
எவரால் முடியும்?

சதத்திற்கு ஒரு சச்சின்
அதிரடிக்கு ஒரு செவாக் என்றால்
சுழல் பந்து வீச்சுக்கு உலகில்
ஒரே ஒரு முரளி மட்டும் தான்!


எங்கு பழகி கொண்டாயோ
இப்படி ஒரு வித்தையை?


எறிந்தால் போதும் ஒரே நாளில்
பல விக்கெட்டுகள் காலில்
எண்ணூறு விக்கெட்டுகள் என்ற
உனது இமாலய சாதனை
எங்கள் நாட்டுக்கு கிடைத்த
மிக பெரிய உலக அங்கீகாரம்

ஓய்வு பெறும் உன் அறிவிப்பு
உனது இரசிகர்களிடையே இதனால்
நீடிக்கின்றது ஒரு வித பரபரப்பு


கிரிக்கெட் உலகினில்
தலை சிறந்த உன் பந்து வீச்சை
மீண்டும் காண எம் கண்கள்
நீண்ட தவமிருகின்றன ...


தடைகளை தகர்த்து
தனக்கென தனி முத்திரை பதித்த
முரளியே கிரிக்கெட் சாம்ராஜியத்தில்
நீதான் என்றும் முடி சூடா மன்னன்!


கடலைகள் ஓய்ந்தாலும்
உனது சாதனைப்பயணம்
ஓயாது தொடர கோடான கோடி
உனது இரசிகர்கள் சார்பாக
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உனக்குப் பல கோடி ...


செல்வநாயகம் ரவிசாந்

புதன், 29 செப்டம்பர், 2010

என்னதான் 'தவறு'..?


எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை.
இயந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக்
காட்டிலும் எமது உயிர்கள் குறைவான மதிப்பை
உடையனவாகவே இருந்தன.
நாங்கள் கற்களைப் போல,
சாலையோரத்துக் களைச்செடிகள் போல இருந்தோம்.

எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன.
நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம்.
நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை.
நாங்கள் உயிர்வாழவே இல்லை.

எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால்
நாங்கள் ஆயுதங்களை ஏந்தவேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால்
எங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால்
எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால்
எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.

எனவேதான் நாங்கள் போராளிகளானோம்.
எமது மக்கள் சாவதை
எமது மக்கள் ஏமாற்றப்படுவதை
இனியும் நாங்கள்விரும்பவில்லை,
நாங்கள் மறக்கப்படுவதை
இனியும் நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால்
எங்கள் ஆயுதமேந்திய குரலுக்குப் பின்னால்
பெயர்சொல்லி அழைக்க முடியாத
எங்கள் பெயருக்குப் பின்னால்
நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால்
நாங்கள் உண்மையில் நீங்களேதான்.

(நன்றி: எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்)

[இழந்துவிட்ட உரிமைகளை, மறுக்கப்பட்ட சுதந்திரங்களை மீட்பதற்கு உயிரையும் ஆயுதமாக்கிப் போனவர்களின் நினைவாக...]

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

தீர்த்தமாடி எம் வினை தீர்த்தருள்வாய்!

23/09/2010 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவையொட்டி எழுதப்பட்டு உதயன் நாளிதழில் பிரசுரமான கவிதை அப்படியே வலைப்பதிவு நண்பர்களுக்காக....