வெள்ளி, 19 மார்ச், 2010

விழிப்பு


இருட்டுக்குள்ளே
இமைத்துக் கொண்டிருந்த
என் கண்களுக்கு
விழிப்பு வந்தது - மெதுவாக
விழித்துப் பார்க்கிறேன்.
மனிதன் நவ நாகரீகத்தில்
மோகம் கொண்டு - அதன்
போர்வைக்குள் அகப்பட்டு
உணர்வூட்டுவாரின்றித்
தினம் தினம் சீரழிகின்றான்!

சந்தியிலே நிற்கின்ற
இளைஞர்களினால்
வேலைச்சுமை தாங்க முடியாது
வெந்து கொள்ளும் அம்மாமார்...
தினமும் நெற்றி வியர்வை
சிந்தச் சிந்த
குடும்பத்துக்காய் உழைத்து
ஓடாய் இளைத்து
வீட்டுச் செலவுக்கே
காசில்லாது சினம் கொள்ளும்
அப்பாமார்...

பக்கத்து வீட்டுக் குடிகார
அப்பனின் குடியால்
அவன் குடும்பம் அன்றாடம்
அவதியுற்று நடுத்தெருவில்
நிற்கும் நிலை
அச்சச்சோ! அவன் வாயால்
சகிக்க முடியாத
உச்சரிப்புக்கள்.

சீதனக் கொடுமையால்
ஆசைகளை வீட்டிலே
பூட்டி வைத்து
அழகு பார்க்கும் பெற்றவர்கள்.
பெற்றெம்மையெல்லாம்
பேணி வளர்த்தாளாக்கிய
அம்மா, அப்பா
யாருமற்ற அனாதைகளாய்த்
தஞ்சம் புகும் முதியோர் இல்லம்.

ஐயோ இதென்ன கொடுமை!
என்னால் இவற்றைப்
பார்க்கவே முடியவில்லை
மீண்டும் கண்களை நான்
இறுக மூடிக் கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

பெண் விடுதலைக்காய்........


மார்ச் 08 பெண்கள் தினத்தை முன்னிட்டு.........

கல்விக் கண் திறக்கச் செய்வோம்
கசடுகளை ஓயச் செய்வோம்
முகில்களைக் கிழிக்கச் செய்வோம்
முறம் கொண்டு எழுந்து நிற்போம்

விண்வெளியில் களமமைப்போம்
மண்ணுலகைப் பொன்னுலகாக்குவோம்
பூவையரின் விழி நீரைப்
புயலாக மாறச் செய்வோம்

பொங்கியெழுந்தே புதியதோர்
சரித்திரம் படைப்போம்
கொழுந்து பறிக்கும் கைகளைக்
ஏட்டைப் பிடிக்கச் செய்வோம்

பானை பிடிக்கும் கைகளால்
பாரை வாழ வைப்போம்
நெஞ்சத் துணிவு கொண்டு
நீதிக்காய்த் தினம் உழைப்போம்

தொட்டிலாட்டும் கைகளால்
நாட்டைக் கட்டியாளச் செய்வோம்
வெட்டிப் பிளந்தாலும்- பெண்
விடுதலைக்காய் போராடுவோம்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

பெண் கவிகள்


நான் படித்த கவிதைகளிலேயே என் நெஞ்சை உலுக்கிய வரிகள் இவை. இதை வாசகர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

“.....அடுத்த ஆண்டும் வசந்தம்
ஆர்ப்பாட்டமாய் வரும்
அடுத்த ஆண்டும்
கொல்லையில்
தேன் சிட்டு முட்டையிடும்
முட்டையை நேசப்பார்வையில்
அடைகாக்க நானிருக்க மாட்டேன்.
அருவருத்தாலும்
நினைவில்
அசையாமல் நின்று போன அட்டையைக் கண்டலற
நானிருக்க மாட்டேன்.
வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும்
மழை நாள் இரவில்
பேசித்தீர்க்க நானிருக்க மாட்டேன்...
அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்....”
- வெண்ணிலா -

“....கண்ணகியைப் பேச
கண்ணகியே எழுந்திருந்தால்
மதுரைக்குப் போய்
மன்னன் முன் சிலம்பை உடைத்து
தெய்வமாகி இருக்கமாட்டாள்.
புகாரியிலேயே கோவலனின்
மண்டையை உடைத்து
மனுஷியாகி இருப்பாள்.
சீதையைப் பேச
சீதையே எழுந்திருந்தால்
அக்னிப் பரீட்சைக்கு
இராமனையும் இழுத்திருப்பாள்.
ஆம் பெண்ணே
உன்னைப் பேச நீயே எழு.....
- அறிவுமதி -

“....எனக்கு
முகம் இல்லை.... இதயம் இல்லை....
ஆத்மாவும் இல்லை....
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்.... நீண்ட கூந்தல்
சிறிய இடை..... பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல், படுக்கையை விரித்தல்,
குழந்தையைப் பெறுதல், பணிந்து நடத்தல்.
இவையே எனது கடமைகள் ஆகும்.....”
-சங்கரி -

“.... ஆறு மணிக்குள்
அவசரமாய் முடிக்க வேண்டும்.
பெண் விடுதலை பற்றிய என் பேச்சை
ஐந்து நிமிடம் தாமதமாய்ப் போனாலும்
அறை விழும் அவரிடம்.......”
- திலகவதி -

“.....பாவம் இந்த மனைவி
இல்லறக் கிரிக்கட்டில்
சமையலறைக்கும்
படுக்கையறைக்கும்
ரன்கள் எடுத்தே ரணமாய்ப் போனாள்.....”
- வைரமுத்து -

“.....கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும் நீங்கள்
கேட்ட வருணனை கொஞ்சங்களோ
இறக்கை வெட்டிய கிளிகளாய் - நீங்கள்
எத்தனை காலம் இக் கூண்டுக்குள்ளே......”
- இன்குலாப் -

“.....ஆரம்பமாயிற்று
என் மீதான விசாரணை
நடக்க வைத்துப் பார்த்ததில்
புன்னகை பூத்தனர் என்னைப் பிடித்திருப்பதாய்
நீண்டிருந்த பட்டங்களைக் கேட்டபடி
சிற்றுண்டித் தட்டுக்களும் தேநீர்க் கோப்பைகளும் காலியாயின
பற்றியிருக்கும் என் அரசுப் பணியை அறிந்ததும்
கைகளில் திணித்தனர் தாம்பூலத்தை
சம்பள விவரத்தைப் பட்டியலிட
குறித்தே விட்டனர் கல்யாணத் தேதியை
எதற்கும் இருக்கட்டுமென
கவிதை எழுதுவதை கடைசியில் சொல்லி வைத்தேன்.
வந்தவர்கள் எழுந்தனர்
வாயிலை நோக்கி...."
- சுகிர்தராணி -

திங்கள், 1 மார்ச், 2010

பாசந்தனை பற்றறுக்கும் மாசி மகத் திருநாள்!


மாசித்திங்கள் மக நட்சத்திரத்திருநாள்
மக்கள் பாசப் பற்றறுக்கும்
மகேசன் பெருநாள்!
வருணனின் பிரம்மஹத்தி தோஷப் பீடிகையை
விட்டொழிக்கவென்று
தேவர் வேண்டி நின்ற போது
கருணையே வடிவான
கருணாமூர்த்தி நின்
கடைக்கண் பார்வை
பெற்றருள் பெற்ற நன்னாள்!

கணக்கில்லா ஆசைதனை
விதைத்து நின்று
திசையில்லா வாழ்வதனைத்
திருப்தியென்று
பாசத்த்ழைகளுள் தினமும்
சிக்கித் தவித்தே
பாரிய வாழ்வதன் பொருளறியாது
மாளுவர் ஆயிரம்
மானிடர் தினம்.

பெரியவர் இவர்
சிறியவர் அவர் என்றே
அகந்தனில் மமதை கொண்ட
மானிடரின் சிந்தை
தெளியவென்று சிறப்புற்ற ஒருநாள்
மாதொரு பாகனின் மலர் பாதம் பற்றி
மாசிமகத் திருநாளில் அவனருள் பெற்றிட
பாசமாம் “பற்றறுத்துப் பாரிக்குமாரியவன்”
மோட்சம் பெற்றுயர
சாந்தியும் சமாதானமும்
தழைத்தோங்க
வேண்டி வழிபடுவோம்.

சனி, 13 பிப்ரவரி, 2010

காதலின் உயர்வு


பார்த்தவுடன் வருவது தான் காதல்
பழகியபோது ஒருவரையொருவர்
புரிந்துகொள்வது தான் காதல்
பள்ளிக் காலங்களிலே
இடையிடையே வந்து போகும்
பசுமையான நினைவுகளே
இந்தக் காதல்.

துள்ளித் திரியும் வேளை தன்னில்
சுமைகளையும் சுகங்களையும்
சொல்லித்தரும் சுதந்திர கீதமே காதல்.
பணத்தால் வருவதல்ல
உண்மைக்காதல்
பண்பு, பாசம், நேசம்
சுரக்கும் இன்ப
ஊற்றே காதல்.

கரும்பு போல இனிப்பதே காதல்
கனவுகள் காணும்
விந்தை உலகமே காதல்.
உள்ளமிரண்டும் இணைவதே காதல்
உயிருக்குள் உயிராகும்
உன்னதக் காவியமே
இந்தக் காதல்.

கண்களின் சந்திப்பினால்
கட்டுண்டுறச் செய்த காதல்
கற்பனைகள் ஆயிரம் காண
களமமைத்துத் தந்த
கருவூலமே காதல்!
பருவ இராகங்கள்
பல பாடிடும் காதல்
பாலைவனத்தையும்
பசுமையாக மாற்றும்
அற்புதச் சக்தியே காதல்.

காமம் கொண்டு பழகுவதல்ல காதல்
கனிவாக ஈருயிரும் கலந்துலாவும்
தேசியகீதமே காதல்.
இரு உள்ளங்களின்
மொழியே காதல்.
வாலிபத்தின்
வைர நினைவுகளே காதல்.
வற்றாத இன்ப ஊற்றே காதல்.

ஏமாற்றுவதற்கல்ல காதல்
ஏணியாய்த் தினம்
துணையிருப்பதே காதல்
சொன்னால் இனிமை காதல்
சுகமாய்ச் சிரிப்பதே காதல்
கரும்பு போல இனிப்பது
தான் காதல்
கவி புனைய எமக்குக்
கற்றுத்தந்த ஆசானே காதல்
இளமைக் காலத்தின்
அழியாப் பக்கமான காதலே
என்றும் வருவாய்
எம் துணையாக.....

வியாழன், 11 பிப்ரவரி, 2010

சிவனுக்குகந்த சிவராத்திரி விரதம்.


மாசித்திங்கள் தன்னில்
மாசறு மாதொரு பாகனை
மனதிலெண்ணி
கார் இருள் முழுதும்
கண் விழித்தவன்
கருணை பெறும்
காலமிதுவன்றோ!

படைப்பவன் பிரம்மாவும்
காப்பவன் விஷ்ணுவும்
கணத்தில் தமக்குள்
கணக்கில்லாப் பெருமையுடன்
சோதியவன் பாதமும்
சிரமும் தேடிய இன்னாள்
மானிடரின் மனக்கிலோசமொழித்து
மகிழ்வூட்டும் விரதப்பெருநாள்.

மானிடராய்ப் பிறந்தவுன்
பற்றினைப் பற்றறச்செய்து
மகாதேவன் அவன் புகழ் கூறிப்
போற்றிப் பணிந்து
மனம் வாக்கு காயமதில்
நிலை நிறுத்தி
மாசிலாப் பேறெய்தும்
மகத்தான திருநாள்!

மாந்தரெல்லாம் உடல் துலக்கி
மலர் அள்ளி
நடராஜன் பெயர் சொல்லி
ஊனுருக்கி உள்ளொளி பெருக்கி
வாழ்வதன் பேறெய்தும் ஒருநாள்
மகேசனவன் புகழ் பாடி
மகிழும் இராத்திரி
மகாசிவன் பெருமை கூறும்
மகாசிவராத்திரியாமே!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....! தொடர்கிறது....


உலகத் தமிழனும் முழுஅளவில் தமிங்கிலத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறான்.

‘மம்மி’, ‘டாடி’, ‘அங்கிள்’, ஆண்டி’, என்று அவன் குழந்தைகள் பெற்றோரை உறவினர்களை அழைப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அவனுக்கு..

எப்போதாவது இலண்டனுக்குத் தன்னைப் பார்க்கத் தமிழீழத்தில் இருந்து உறவினர்கள் வரும் போது அவர்களிடம் ‘என் பிள்ளைக்கு தமிழ் கொஞ்சம் கூட பேச வராது’ என்று சொல்லிக் கொள்வதில் எல்லையில்லாப் பெருமை.

தன் பிள்ளைகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத வைத்துத் தன்னையே மறக்கிறான் தமிழன்.

தமிழன் வீழ்ச்சிக்கும் தமிழின் வீழ்ச்சிக்கும் தமிழனே வாசல் திறக்கிறான்.

இலங்கைத் தீவு முழுவதிலுமே 1956 ஆம் ஆண்டுதான் தனிச் சிங்களத்தை இன வெறிச்சிங்களவர்கள் ஆட்சிமொழியாக்கினார்கள்.

அதே 1956 இல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த பேராயக்கட்சி தமிழை ஆட்சி மொழியாக்கியது.

சிங்களவனைப் பொறுத்தவரை அவன் தனது தாய் மொழியை ஆட்சி மொழியாக்கிச் சிங்களத்தை உயர்த்தி விட்டான்.

எங்கும் எதிலும் சிங்களம் என்றாகி விட்டது.

ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றிச் சிங்களவனுக்கு 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. தமிழ் நாட்டானுக்கும் 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. சிங்களவன் மொழிப்பற்றையும் நம் மொழிப்பற்றையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழ் நாட்டில் செத்துக் கிடக்கிறது.

கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் ஒரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய ஆங்கிலம் ஆட்சிமொழி.
கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் இன்னொரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய சிங்களம் ஆட்சி மொழி.

தலை குனிய வேண்டும் தமிழன்.

பிரான்ஸ் நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது. ஜேர்மனிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ஜேர்மனி தெரிகிறது. ரஷ்ய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ரஷ்யா தெரிகிறது. தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது மட்டும் இங்கிலாந்து அல்லவா தெரிகிறது.

உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும் தமிழன்.

இனியும் தமிழின் அருமை மறந்து வாழ்தல் தமிழர்க்கு இழிவு பயப்பதாகும்.

நயாகரா நீர்வீழ்ச்சியில் ‘நல்வரவு’ எனத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதாம். கேட்போரிடம் ‘உலகின் மூத்த மொழியான தமிழை உலகின் உயர்ந்த நீர்வீழ்ச்சியான நயாகராவில் எழுதி வைத்திருக்கிறோம்’ என்கிறார்களாம்.

யப்பானியப் பல்கலைக்கழக வாயில் முகப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்னும் சங்கத் தமிழ்ப் பாடல் வரியை மொழிபெயர்த்து யப்பானியர் எழுதி வைத்துள்ளனராம்.

ஜெருசேலம் நகரில் உள்ள ஒலிவ மலையில் கிறிஸ்த்தவக் கோயில் ஒன்றில் ஜேசு கற்பித்த வழிபாட்டுக் கருத்து உலகிலுள்ள அறுபத்தெட்டு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறதாம். அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளதாம்.

புத்தர் தமிழ் படித்தார். என்று மிகப்பழைய வடமொழி நூலான ‘இலலித விசுதாரம்’ தமிழைப் புகழ்ந்து பேசுகிறதாம்.

என் கல்லறையில் ‘ ஒரு தமிழ் படித்த மணவன்’ என எழுதி வையுங்கள். என்று மேனாட்டாரான தமிழறிஞர் போப் தனது மறைவுக்கு முன்பு நண்பர்களிடம் எடுத்துரைத்தாராம்.

‘திருக்குறளைப் படிக்க நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்’. என்க் காந்தியடிகள் திரும்பத் திரும்பக் கூறுவாராம்.

மற்றவர்களுக்கெல்லாம் தமிழின் அருமை பெருமை தெரிகிறது. உற்றவர்களுக்கு மறந்து போயிற்றே.

இன்னொன்று -

அடுத்தவர்களெல்லாம் தமிழைப் போற்றியிருக்கிறார்கள். என்பது ஒரு புறம் உண்மை தான் எனினும் அவர்களில் யாராவது தங்களைத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?

குமரிக் கண்டத்திலிருந்து உலகம் முழுவதும் பரவிய காலம் முதல் இற்றை வரை தமிழன் தான் போன போன இடங்களிலெல்லாம் ஆங்காங்குள்ள இனத்தவனாய் மாறிப் போனானே தவிர அடுத்தவன் தமிழனாய் மாறினான் என்ற குறிப்பு வரலாற்றில் எங்குமே இல்லை.

தமிழனால் தமிழ் அழிந்தது. என்பது நமது நேற்றாக இருந்தது.

தமிழனால் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. என்பது நமது இன்றாக இருக்கிறது.

தமிழனால் தமிழ் மீட்கப்பட்டது. என்பது நமது நாளையாக இருக்கட்டும்.

- முற்றும்-

(காசி ஆனந்தனின் “ தமிழனா... திமிங்கிலனா? ” என்ற நூலில் இருந்து.....)